தமிழ்நாடு

பா.ஜனதாவுடன் உறவு இல்லை என்பது அ.தி.மு.க.வின் தேர்தல் தந்திரம்- ஜவாஹிருல்லா

Published On 2024-04-16 07:00 GMT   |   Update On 2024-04-16 07:00 GMT
  • பாராளுமன்ற தேர்தல் சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையே நடைபெறும் அறப்போர்.
  • தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது.

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

கேள்வி: ஒரு இடம் கூட கொடுக்காத போதும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வது ஏன்?

பதில்: இந்த பாராளுமன்ற தேர்தல் சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையே நடைபெறும் அறப்போர். எங்களுக்கு ஒரு சீட் கூட ஒதுக்காதது வருத்தம் தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதைவிட மிகப்பெரிய வலி என்னவென்றால் 10 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் ஜனநாயகத்தின் விழுமியங்கள், அரசியல் சாசனத்தின் அடிப்படைகள் மீறப்பட்டு பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்வுரிமைகள் பாழ்படுத்தப்பட்டுள்ளன. தனிப்பட்ட பாதிப்பை விட நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற பொது நோக்கத்துக்காக இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

கேள்வி: சிறுபான்மையினருக்கு அரணாக இருப்போம் என்று கூறும் உங்கள் கூட்டணி கட்சிகள் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லையே?

பதில்: எங்கள் கூட்டணியில் முஸ்லிம் லீக் சார்பாக ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுகிறார். நிச்சயமாக இதைவிட அதிகமாக தர வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கிறோம். அடுத்த முறை அதை எங்கள் கூட்டணி கட்சிகள் நிவர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கேள்வி: பா.ஜனதாவுடனான உறவை அ.தி.மு.க. துண்டித்துள்ளதால் சிறுபான்மையினரின் ஓட்டுகள் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளதா?

பதில்: நிச்சயமாக பிரியாது. காரணம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது அ.தி.மு.க. அது குறித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக அன்றைய எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்ட போது அன்றைய முதலமைச்சர் மறுத்து விட்டார். ஆட்சி மாறிய பிறகு கூட தி.மு.க. தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்த போது வெளிநடப்பு செய்து விட்டது அ.தி.மு.க.

அது மட்டுமல்லாமல் கொரோனா காலக்கட்டத்தில் இங்கு வந்த வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் சகோதரர்களை கொரோனாவை பரப்பினார்கள் என்பதற்காக சிறையில் அடைத்தது அ.தி.மு.க.அரசு. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குகளை போட்டது அ.தி.மு.க.அரசு. இப்படியாக பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம். எனவே பா.ஜனதாவுடன் உறவு இல்லை என்று அ.தி.மு.க. சொல்வது தேர்தல், அரசியல் தந்திரமாகும். ஆகவே நிச்சயமாக சிறுபான்மையினர் வாக்குகள் பிரியாது. சிறுபான்மை மக்களின் நலனை காக்க கூடிய கூட்டணி இந்தியா கூட்டணியாகும். ஒட்டு மொத்தமாக சிறுபான்மையினர் இந்தியா கூட்டணிக்கே வாக்களிப்பார்கள்.


கேள்வி:- பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து அடிக்கடி பிரசாரம் மேற்கொள்வது ஏன்?

பதில்:-தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு பெரிய அலை வீசுகிறது. மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதெல்லாம் மோடி தமிழ்நாட்டை எட்டி கூட பார்க்கவில்லை. தமிழ்நாடு அரசு கேட்ட நிவாரண தொகைகளை தருவதற்கு எல்லாம் அவருக்கு மனம் வரவில்லை.இப்போது தேர்தலில் எப்படியாவது பா.ஜ.க .வை ஒரு இடத்திலாவது வெல்ல வைக்க முடியுமா என்பதற்கு அவர் பலமுறை வருகிறார். ஆனால் நிச்சயமாக தமிழ்நாட்டில் பா.ஜனதா ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது.

கேள்வி:- இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. எழுச்சி பெற வாய்ப்பு உள்ளதா?

பதில்:-நிச்சயமாக எழுச்சி பெற வாய்ப்பு இல்லை. காரணம் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது. முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் இந்த கூட்டணியில் தான் இருக்கின்றன. எனவே தமிழ்நாட்டில் பா.ஜனதா ஒரு இடத்தில் கூட வெல்வது கடினம்.

கேள்வி:- இந்தியா முழுவதிலும் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியா கூட்டணி வலுவாக இல்லையே?

பதில்:- நிச்சயமாக அது ஒரு தவறான கருத்து. இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல வட இந்தியாவிலும் வலுவாக இருக்கிறது. இன்றைக்கு வரக் கூடிய பல்வேறு செய்திகள் வட இந்தியாவிலும் மோடிக்கு எதிரான எதிர்ப்பு அலை வீசுகிறது. இந்தியா கூட்டணிக்கு ஆதரவான ஒரு அலை வீசுகிறது என்பதுதான் யதார்த்தமான உண்மையாக இருக்கின்றது. எனவே இந்தியா கூட்டணி வட இந்தியாவிலும் சிறப்பான வெற்றியை பெறும்.

கேள்வி:- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி உங்கள் கருத்து?

பதில்:-மிக சிறப்பான ஒரு தேர்தல் அறிக்கையாகும். பலதரப்பட்ட மக்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றக்கூடிய தேர்தல் அறிக்கை. மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ரூ. 1 லட்சம் தரப்படும், பட்டதாரிகள், பட்டய படிப்பு படித்த மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக ரூ. 1 லட்சம் தரப்படும் உள்ளிட்ட மிகவும் அற்புதமான அறிவிப்புகள். இதே போல மோடி அரசு நிறுத்திய கல்வி உதவித் தொகை எல்லாம் வழங்கப்படும். இப்படியான சிறந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. உண்மையிலேயே இந்த தேர்தலின் கதாநாயகனாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்து இருக்கிறது.

பா.ஜனதா கடந்த 2 தேர்தல்களில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்றார்கள். இது பற்றி கேட்ட போது தேர்தல் நேரத்தில் நாங்கள் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா? அது தேர்தலுக்காக சொல்லப்பட்டது என்றனர்.

கேள்வி:-ராகுல் காந்தி தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டுமே பிரசாரம் செய்துள்ளாரே?

பதில்:-ஒருமுறை தான் வந்தார். ஆனால் அந்த ஒரு முறையில் அவர் நடந்து கொண்ட விதம் குறிப்பாக கோவையில் வாகனத்தில் போகும் போது இறங்கி இனிப்பு கடைக்கு சென்று இனிப்பை வாங்கி அதற்குரிய தொகையை கொடுத்து விட்டு தேர்தல் பரப்புரை மேடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எனது மூத்த சகோதரர் என்று சொல்லி அவரிடம் அந்த சுவீட்டை கொடுத்த அந்த காட்சி மூலமாக தமிழக மக்களுடைய உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டு விட்டார் ராகுல்காந்தி. நிச்சயமாக அவருடைய நடத்தை, பேச்சு தமிழ்நாட்டு மக்களை கவர்ந்து இருக்கிறது. ராகுல்காந்தி மிக சிறப்பான தேர்தல் பரப்புரையை செய்து வருகிறார்.

கேள்வி:-2019 தேர்தலுக்கும், தற்போதைய தேர்தலுக்கும் என்ன மாற்றம் இருக்கிறது?

பதில்:-2019 தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜனதா கூட்டணியில் இருந்தது. தற்போது அ.தி.மு.க. தனியாகவும், பா.ஜ.க. தனியாகவும் போட்டியிடுகின்றன. எனவே தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் எல்லாம் 3 முனைகளில் பிரிகிறது. இதனால் இந்த தேர்தலில் தி.மு.க. மிக எளிதாக 40 தொகுதிகளில் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் வெற்றி பெறும்.

கேள்வி:- பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ள உங்களுக்கு கள நிலவரம் என்ன சொல்கிறது?

பதில்:-நான் செல்லக் கூடிய இடங்களில் எல்லாம் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு அமோக ஆதரவு இருக்கிறது. எனக்கும் உற்சாகமான வரவேற்பை மக்கள் தருகிறார்கள். மக்களின் ஆதரவு அலை இந்தியா கூட்டணி பக்கம் வீசுகிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக இந்த பரப்புரை அமைந்துள்ளது.

இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

Tags:    

Similar News