தமிழ்நாடு

பெண்களுக்கான புதிய திட்டத்தை அறிவித்தாரா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அ.தி.மு.க. புகார்

Published On 2024-03-30 03:20 GMT   |   Update On 2024-03-30 03:20 GMT
  • வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும்.
  • ஆரணி பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கடந்த 26-ந்தேதியன்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் அளித்த புகார் மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கடந்த 27-ந் தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கலுக்காக சென்றார். கூட்டணியில் உள்ள தி.மு.க. பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவருடன் சென்றனர். அங்கு சென்று புகைப்படம் எடுத்து அதை சசிகாந்த் செந்தில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் புகைப்படத்தில் அவருடன் பலரும் நிற்பது தெரிகிறது. இது தேர்தல் நடத்தை விதியை மீறிய சம்பவமாகும். ஆனால் அதைத் தடுக்காமல், தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட கலெக்டர் அனுமதித்துள்ளார். அதன்படி, அவர் ஆளும் கட்சியான தி.மு.க.விற்கு சாதகமாக இருக்கிறார் என்பது நிரூபணமாகிறது. எனவே சசிகாந்த் செந்திலை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும்.

ஆரணி பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கடந்த 26-ந்தேதியன்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது, தேர்தல் முடிந்த பிறகு மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். இது மக்களை கவரும் நோக்கத்தில் செய்யப்பட்ட பிரசாரமாகும். தேர்தல் நடத்தை விதியின்படி புதிய திட்டங்களை அறிவிக்கக்கூடாது.

எனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நட்சத்திர பேச்சாளர் என்ற நிலையில் இருந்து அப்புறப்படுத்தி, இந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News