தமிழ்நாடு செய்திகள்

வாயை வாடகைக்கு விட்ட கமல்ஹாசன்: செல்லூர் ராஜூ கிண்டல்

Published On 2024-02-04 08:45 IST   |   Update On 2024-02-04 08:45:00 IST
  • சினிமா துறையில் இருந்து வந்த பாக்கியராஜ் கட்சி ஆரம்பித்தார்.
  • சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

மதுரை:

மதுரை விளாங்குடியில் முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

சினிமா துறையில் இருந்து வந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவர் தான் கட்சி ஆரம்பித்து அரசியலில் சாதித்தவர்.

31 ஆண்டு காலம் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி செய்து, வரலாறு படைத்தது. சினிமா துறையில் இருந்து வந்த சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்தார். அவர் சினிமாவில் அழுதால் மக்கள் அழுவார்கள். அவர் சிரித்தால் மக்கள் சிரிப்பார்கள். நடிப்பால் அவர் புகழ் பெற்றவர். ஆனால் கட்சி தொடங்கி அவரால் வெற்றி பெற முடியவில்லை.

அதேபோல் சினிமா துறையில் இருந்து வந்த பாக்கியராஜ் கட்சி ஆரம்பித்தார். அடுக்குமொழியில் பேசும் டி.ராஜேந்தர் கட்சி ஆரம்பித்தார். போணியாகவில்லை. ரஜினி கட்சி அறிவித்தார். ஆனால் வாபஸ் வாங்கிவிட்டார்.

ஊழலை ஒழிப்பேன், நீதி கேட்பேன் என கமல்ஹாசன் கட்சி தொடங்கினார். ஒரு தொகுதிக்காக தனது வாயை இப்போது வாடகைக்கு விட்டுவிட்டார்.

தற்போது விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் இளைஞர். நல்ல மனம் படைத்தவர். ஒரு லட்சியத்தோடு வருவதாக சொல்கிறார்.

ஆனாலும் வருகின்ற 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாமல், எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் ஆவார்.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். இதற்கு, வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும். கூட்டணி பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களது கையே எங்களுக்கு பலம். தொண்டர்களின் பலம் எங்களுக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News