மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் இன்று 2-வது நாளாக ரத்து
- தண்டவாள பகுதியே சேறும், சகதியுமாக காணப்பட்டது.
- ரெயிலில் ஊட்டிக்கு பயணிக்கலாம் என வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் பாதையில் பல்வேறு இடங்களில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டது. அத்துடன் மரங்கள் சாய்ந்தும், பாறைகளும் உருண்டு விழுந்தன. இதனால் தண்டவாள பகுதியே சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதன் காரணமாக நேற்று மலைரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து குன்னூர் மலைரெயில் இருப்பு பாதை பொறியாளர் மேற்பார்வையில் ரெயில்வே தொழிலாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைரெயில் பாதையில் ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக இன்று 2-வது நாளாக ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைரெயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ரெயிலில் ஊட்டிக்கு பயணிக்கலாம் என வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.