தமிழ்நாடு செய்திகள்
null

இளைஞர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பழக்கம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?

Published On 2026-01-02 21:55 IST   |   Update On 2026-01-02 21:58:00 IST
  • நாட்டில் நடக்கும் மிக முக்கிய பிரச்னை சாதி, மத மோதல்கள் தான்.
  • போதைப்பொருள் பயன்பாட்டை பெருமைப்படுத்தக் கூடாது. அது, ஒரு தலைமுறையையே சீரழித்து விடும்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தின் துவக்க விழா திருச்சி, தென்னூரில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது இளைஞர்களிடையே போதைப்பொருட்கள் அதிகரிப்பு குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 

போதையின் பாதையில் இருந்து இளைஞர்களைக் காக்க வேண்டும். அதை ஒழிக்க அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதனால், ஓரளவிற்கு பலனும் கிடைத்துள்ளது. போதைப்பொருள் மிகப்பெரிய நெட்வொர்க். அதை ஒழிக்க மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியாவிற்குள் போதைப்பொருள் மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். அதற்கு, அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த சில மாதங்களில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், கைது செய்யப்பட்டவர்கள் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்கள் தான்.

அந்த நெட்வொர்க் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். போதைப் பொருளை ஒழிக்க தமிழ்நாட்டின் துறைகள் மத்திய அரசின் துறைகளோடும் பிற மாநில அரசு துறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கி செயல்பட்டு வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பது சமூகத்தின் கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். கலைத்துறையை சார்ந்தவர்கள் பொறுப்புணர்வோடு படைப்புகளை தர வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டை பெருமைப்படுத்தக் கூடாது. அது, ஒரு தலைமுறையையே சீரழித்து விடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தவறான பாதைக்குச் செல்லும் போது வேடிக்கை பார்க்கக் கூடாது.

அவர்களை தீவிரமாக கண்காணித்து பொறுப்போடு வளர்க்க வேண்டும். மனம் விட்டு பேச வேண்டும். நாட்டில் நடக்கும் மிக முக்கிய பிரச்னை சாதி, மத மோதல்கள் தான். மத்திய அமைச்சர் பதவியில் இருப்பவர்களே வெறுப்பு பேச்சுக்களை பேசி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகிறார்கள். இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், அமைதியையும் சீர்குலைக்கும் வேலைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் என எல்லோரும் அச்சத்துடன் வாழ்கிறார்கள். சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கிறிஸ்துவ மக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருந்த காலம் போய் ஒருவருக்கொருவர் எதிரியாக இருக்கக்கூடிய வேலையை பிளவுவாத சக்திகள் செய்து வருகிறார்கள்.

அன்பு செய்ய சொல்லி தர வேண்டிய ஆன்மிகத்தை, சிலர் வம்பு செய்ய பயன்படுத்தி வருகிறார்கள். மது போதையும் அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்க நாம் ஒன்று சேர வேண்டும். என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News