தமிழ்நாடு

தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்!- மு.க.ஸ்டாலின்

Published On 2024-03-30 04:54 GMT   |   Update On 2024-03-30 06:29 GMT
  • கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?
  • விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.

சென்னை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் 5 முறை பிரசாரம் செய்துள்ளார். தமிழகத்தில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் பேசத் தொடங்கும்போது "வணக்கம்" என்று தமிழில் கூறியே பிரசாரம் செய்வதை அவர் வழக்கமாக வைத்துள்ளார்.

தனது பேச்சின் இடையே திருக்குறளை கூறுவது, தனக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகளை உச்சரிப்பது என பிரதமர் மோடியின் தமிழ் பாசம் தேர்தல் களத்தில் தொடர்ச்சியாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று மாலையில் தமிழக பாரதிய ஜனதா பொறுப்பாளர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது தமிழில் பேச முடியவில்லையே என்று வருத்தப்பட்ட அவர், "தாய்மொழியாக தமிழ் வாய்க்கவில்லையே" என்றும் கூறி ஆதங்கப்பட்டார்.

இதற்கு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். எங்கும் இந்தி, எதிலும் இந்தி என இந்தியை திணித்துவிட்டு பிரதமர் மோடி கண்ணீர் வடிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,

நேற்று மாலைச் செய்தி:

தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!

நேற்று காலைச் செய்தி:

அழகிய தமிழ்ச்சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?

கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?

ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

 பிரதமர் மோடி அவர்களே...

கருப்புப் பணம் மீட்பு,

மீனவர்கள் பாதுகாப்பு,

2 கோடி வேலைவாய்ப்பு,

ஊழல் ஒழிப்பு போல்

காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான்,

அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு!

விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.

"எங்கும் இந்தி! எதிலும் இந்தி!" என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை!

தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்! என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News