தமிழ்நாடு

பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும்- கனிமொழி

Published On 2024-03-28 08:22 GMT   |   Update On 2024-03-28 08:22 GMT
  • டெல்லியை நோக்கி போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள்போல் மோடி அரசு நடத்துகிறது.
  • கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்துள்ளது பா.ஜ.க. அரசு.

கரூர்:

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் கரூர் கிருஷ்ணராயபுரம் கடைவீதி, வெங்கமேடு அண்ணாசிலை அருகில், க.பரமத்தி கடை வீதி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பா.ஜ.க. ஆட்சியில் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது. 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தை வழங்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏமாற்றியது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படும்.

பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும். டோல்கேட் அகற்றப்படும். இந்தியா கூட்டணி ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கப்பதாக கூறி மோடி அரசு ஏமாற்றியுள்ளது. விவசாயிகள் கடன்கள், மாணவர்களின் கல்விக் கடன்களை ரத்து செய்ய மோடி அரசு மறுத்துள்ளது. டெல்லியை நோக்கி போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள்போல் மோடி அரசு நடத்துகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்துள்ளது பா.ஜ.க. அரசு. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பா.ஜ.க. எம்.பி.க்கள் 44 பேர் நாடாளுமன்றத்தில் உள்ளனர். தேர்தல் பத்திரங்கள் மூலம் இமாலய ஊழல் நடந்துள்ளது.

மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News