தமிழ்நாடு

2-வது நாளாக போராட்டம்: ஆசிரியர்கள் 500 பேர் கைது

Published On 2024-02-20 08:29 GMT   |   Update On 2024-02-20 08:29 GMT
  • 14 ஆண்டு காலமாக நீடித்து வரும் இந்த பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும்.
  • பள்ளி கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

சென்னை:

பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் பள்ளிக் கல்வி அலுவலகம் முற்றுகை போராட்டம் இன்று 2-வது நாளாக நடந்தது. நேற்று முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களை கைது செய்து மாலையில் போலீசார் விடுவித்தனர்.

ஆனாலும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் தங்கி இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலை-சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். முரண்பாடுகளை களைய வேண்டும். 14 ஆண்டு காலமாக நீடித்து வரும் இந்த பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி காலை 9 மணி முதல் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் கூடத் தொடங்கினர்.

அங்கிருந்து பள்ளி கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் போலீசார் அதற்கு முன்பாகவே ஆசிரியர்களை மறித்து கைது செய்தனர்.

கிரீம்ஸ் சாலையில் இருந்து அவர்களை வெளியே வர முடியாமல் தடுத்து மறித்தனர். மாநில பொறுப்பாளர்கள் ராபர்ட், ஆனந்தகுமார், கண்ணன், வேல்முருகன், ஞானசேகரன் ஆகியோர் தலைமை யில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப் பட்டனர்.

போராட்டம் குறித்து சங்க நிர்வாகி கூறியதாவது:-

எங்களோடு பணியில் சேர்ந்த இளநிலை உதவியாளருக்கும், ஆசிரியருக்கும், ஊதிய முரண்பாடு ரூ.3170 உள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

எங்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் போராட்டம் தொடரும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்றார்.

Tags:    

Similar News