செய்திகள்
கொலையான கெங்கை பாண்டி

ஆலங்குளம் அருகே வாலிபர் கொலையில் 2 பேர் கைது

Published On 2019-03-12 10:16 GMT   |   Update On 2019-03-12 10:16 GMT
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
ஆலங்குளம்:

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் மகன் கெங்கை பாண்டி (வயது 23). இவர் மாறாந்தை அருகே உள்ள சோலார் பவர் பிளாண்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளை நெல்லையில் சர்வீஸ் செய்ய கொடுத்திருந்தார்.

நேற்று முன்தினம் அதனை எடுத்துக் கொண்டு தனது ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தார். நெல்லை அருகே உள்ள அபிஷேகப்பட்டியை அடுத்த வெள்ளாளன்குளம் விலக்கு அருகே வந்தபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி கீழே தள்ளி சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த கெங்கை பாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சீதபற்பநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

கொலை செய்யப்பட்ட கெங்கை பாண்டிக்கும், கொண்டாநகரத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது வந்தது. அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இதை அறிந்த கணேசன் இருவரையும் எச்சரித்துள்ளார். ஆனால் கள்ளக்காதல் ஜோடியினர் அதை மீறியும் பேசி பழகி உள்ளனர்.

இது கணேசனுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கணேசன் மற்றும் அவரது உறவினர் நெட்டூரை சேர்ந்த சுடலைமுத்து என்ற குமார் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து கெங்கை பாண்டியனை வெட்டிக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தப்பி ஓடிய கணேசன் உள்பட 4 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கணேசன், சுடலைமுத்து என்ற குமார்(30) ஆகிய இருவரையும் போலீசார் இன்று கைது செய்தனர். கைதான கணேசன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கெங்கை பாண்டி எனது மனைவியிடம் அடிக்கடி போனில் பேசி வந்தார். இதை நான் கண்டித்தேன். எனினும் அவர் கேட்கவில்லை. நேரிலும் அவரை கண்டித்தேன். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

இதற்கான தருணம் பார்த்து காத்திருந்தேன். இந்த நிலையில் அவர் வெள்ளாளன்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்வதை அறிந்து எனது உறவினர்கள் சுடலைமுத்து, சக்தி ஆகியோருடன் சேர்ந்து கெங்கைபாண்டியை வழிமறித்து வெட்டி கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

இதனிடையே கெங்கை பாண்டி கொலை செய்யப்படும் முன்பாக கணேசனின் மனைவி முப்பிடாதியிடம் பேசியுள்ளார். அவரை போனில் தனது வீட்டுக்கு வருமாறு முப்பிடாதி அழைத்துள்ளார். இதை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கில் முப்பிடாதி மற்றும் நெட்டூரை சேர்ந்த சக்தி ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News