தெறிக்கவிட்ட தொடக்க ஜோடி: இந்தியாவுக்கு 216 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து
- நியூசிலாந்து 4.3 ஓவரில் 50 ரன்களையும், 8.1 ஓவரில் 100 ரன்களையும் தொட்டது. 15 ஓவரில் 150 ரன்களை தொட்டது.
- செய்பெர்ட் 36 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் கான்வே, டிம் செய்பெர்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஜெட் வேகத்தில ரன் உயர்ந்தது. 4.3 ஓவரில் 50 ரன்களை தொட்டது. செய்பெர்ட் 25 பந்தில் அரைசதம் விளாசினார். நியூசிலாந்து 100 ரன்களை எட்டும் விரை விக்கெட் இழக்கவில்லை. ஆகவே, நியூசிலாந்து அணி 230 ரன்கள் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
9-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் கான்வே ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 44 ரன்கள் விளாசினார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா 2 ரன்னில் பும்ரா பந்தில் வெளியேறினார். அத்துடன் டிம் செய்பெர்ட் 36 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து 12.2 ஓவரில் 126 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் நியூசிலாந்தின் ரன்வேகத்தில் மந்தநிலை ஏற்பட்டது, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பிலிப்ஸ் 24 ரன்னிலும், சாப்மேன் 9 ரன்னிலும், மிட்செல் சாட்னெர் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 15 ஓவரில்தான் 150 ரன்னைத் தொட்டது.
டேரில் மிட்செல் கடைசி வரை நின்று 18 பந்தில் 39 ரன்கள் அடிக்க நியூசிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த அணியில் அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஹர்ஷித் ராணா 4 ஓவரில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.