null
பத்மஸ்ரீ விருது அறிவிப்பு: ரோகித் சர்மாவுக்கு வெங்கடேஷ் பிரசாத் புகழாரம்
- பத்மஸ்ரீ விருதுக்கு ரோகித் சர்மா முழுத் தகுதியானவர்.
- இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்ற ஒரே இந்திய வீரராக அவர் தனித்து நிற்கிறார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கிய ரோகித் சர்மாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரோகித் அந்த விருதுக்கு முழுத் தகுதியானவர் என இந்திய அணியின் முன்னாள் வீரரும் KSCA தலைவருமான வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பத்மஸ்ரீ விருது பெறுவது ஒரு மிகப்பெரிய சாதனை. மேலும் ரோகித் சர்மா அதற்கு முழுத் தகுதியானவர். அவர் பல ஆண்டுகளாக அனைத்து வடிவங்களிலும் விளையாடி, ஒரு அசாதாரணமான சாதனைகளைப் படைத்துள்ளார். இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்ற ஒரே இந்திய வீரராக அவர் தனித்து நிற்கிறார்.
மேலும் ரோகித்துக்கு 16 அல்லது 17 வயது இருந்தபோது, அவர் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணிக்காக விளையாடிய காலத்திலிருந்தே நான் அவரைப் பார்த்து வருகிறேன். அப்போதே, அவரிடம் இருந்த அபாரமான திறமையையும் ஆற்றலையும் காண முடிந்தது.
ஆரம்பத்திலிருந்தே என்னை மிகவும் கவர்ந்த விஷயம். அவர் தனது ஷாட்களை ஆடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டார் என்பதுதான். இந்தியாவில் உருவான எந்தவொரு சிறந்த வீரருடனும் நீங்கள் ரோகித் சர்மாவை எளிதாக ஒப்பிடலாம். நாம் பேசிக்கொண்டிருப்பது அப்படிப்பட்ட ஒரு தரமான பேட்ஸ்மேனைப் பற்றித்தான்.
என அவர் கூறினார்.