கிரிக்கெட் (Cricket)

இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா? நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இன்று மோதல்

Published On 2026-01-28 07:37 IST   |   Update On 2026-01-28 07:37:00 IST
  • விசாகப்பட்டினம் மைதானத்தில் இதுவரை நான்கு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன.
  • இதில் இந்திய அணி மூன்றில் வெற்றி கண்டுள்ளது.

விசாகப்பட்டினம்:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 48 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், கவுகாத்தியில் நடந்த 3-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

முதல் 3 ஆட்டங்களில் அதிரடி பேட்டிங்கால் மிரட்டி தொடரை வசப்படுத்திய இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடரும் ஆர்வத்தில் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் (171 ரன்), அபிஷேக் ஷர்மா (152 ரன்), இஷான் கிஷன் அசத்தி வருகிறார்கள். ஆனால் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் வேகமாக மட்டையை சுழற்ற ஆசைப்பட்டு விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். நடப்பு தொடரில் 16 ரன்களே எடுத்து இருக்கும் அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல நிலைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.

பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி முறையே 2, 3 விக்கெட்டுகளையே வீழ்த்தி உள்ளனர். கடந்த ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்திக்கு ஓய்வு அளிப்பட்டதால் வாய்ப்பு பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் 2 விக்கெட் கைப்பற்றினார். வருண் சக்ரவர்த்தி திரும்பினாலும் ரவி பிஷ்னோய் இடத்தை தக்கவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடரை சொந்தமாக்கி விட்டதால் அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

நியூசிலாந்து அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி தடுமாறி வருகிறது. அவர்களது பேட்ஸ்மேன்களின் ஆட்டம் எப்போதாவது தான் எடுபடுகிறது. பேட்டிங்கில் கிளென் பிலிப்ஸ் (145 ரன்), மிட்செல் சான்ட்னெர், மார்க் சாப்மேனும் நம்பிக்கை அளிக்கின்றனர். பந்து வீச்சில் ஜேக்கப் டப்பி, சோதி தவிர மற்றவர்களின் செயல்பாடு மெச்சத்தக்க வகையில் இல்லை.

இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடர முழு பலத்தையும் வெளிக்காட்டும். அதேநேரத்தில் தொடரை இழந்து விட்ட நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

விசாகப்பட்டினம் மைதானத்தில் இதுவரை நான்கு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி மூன்றில் வெற்றி கண்டுள்ளது. ஒன்றில் மட்டும் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா அல்லது அர்ஷ்தீப் சிங்.

நியூசிலாந்து: டிவான் கான்வே, டிம் செய்பெர்ட், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னெர், கைல் ஜாமிசன், மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Tags:    

Similar News