பந்தை எல்லா திசைகளிலும் பறக்கவிட்டால் எப்படி யோசிப்பது?: நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்
- இந்திய பேட்டிங் வரிசை முழுவதும் சவால்கள் நிறைந்ததாக உள்ளன.
- சூப்பர் டூப்பர் ஃபார்மில் உள்ள மூன்று பேரையும் சாய்ப்பது எளிதாக காரியம் அல்ல.
இந்தியா- நியூசிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய பேட்ஸ்மேன்கள் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் 250-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடுகிறார்கள். இதனால் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் அமைதியாக இருந்து திட்டத்தை செயல்படுத்துவதில் குழப்பம் உள்ளது என நியூசிலாந்து பந்து வீச்சு பயிற்சியாளர் ஜேக்கப் ஓரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜேக்கப் ஓரம் கூறியதாவது:-
மைதானத்தில் எல்லா திசைக்கும் பந்துகள் பறந்து கொண்டிருந்தால், எங்களுக்கு தொடர்ந்து அமைதியாக இருந்து, திட்டங்களை நியாபகப்படுத்தி, அவற்றை வெளிப்படுத்துவதில் மைதானத்தில் சற்று குழப்பம் நிலவியது. ஆனால், நான் மீண்டும் சொல்கிறேன், இது எல்லாம் கற்றுக் கொள்வதின் ஒரு பகுதி.
இதேபோல்தான் 1900 முதல் 2000 வரை ஜெயசூர்யா அதிரடியாக விளையாடினார். இது விளையாட்டின் இயல்பான வளர்ச்சி என்று நான் நினைக்கிறேன்.
நீங்கள் பார்ப்பது என்னவென்றால், பந்துவீச்சாளர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது. பந்துவீச்சுப் பயிற்சியாளராக அதுவே இப்போது எங்களுக்குள்ள சவால். மேலும் இது குறித்து நிறைய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
ஆனால் விஷயம் என்னவென்றால், அபிஷேக் சர்மா மட்டும் தனியாக இல்லை. சூர்யகுமார் சிறப்பாக விளையாடியுள்ளார். இரண்டாவது போட்டியில் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார். இந்திய பேட்டிங் வரிசை முழுவதும் சவால்கள் நிறைந்ததாக உள்ளன என்பது எங்களுக்குத் தெரியும். சூப்பர் டூப்பர் ஃபார்மில் உள்ள மூன்று பேரையும் சாய்ப்பது எளிதாக காரியம் அல்ல.
இவ்வாறு ஜேக்கப் ஓரம் தெரிவித்துள்ளார்.