மகளிர் பிரீமியர் லீக்: கெத்து காட்டிய மும்பை இந்தியன்ஸ்.. 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி தோல்வி
- சதம் விளாசிய அவர் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- 9 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.
பெண்கள் பிரீமியர் லீக் 2026 சீசனில் வதோதராவில் நடைபெற போட்டியில் ஆர்சிபி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெய்லே மேத்யூஸ், சஜீவன் சஜனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். சஜனா 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து மேத்யூஸ் உடன் நாட் ஸ்கைவர்-பிரன்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேத்யூஸ் 39 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் விளையாடிய நாட் ஸ்கைவர்-பிரன்ட் அபாரமாக விளையாடி 57 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் பெண்களுக்கான பிரீமியர் லீக்கில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். இவர் இங்கிலாந்து வீராங்கனை ஆவார்.
சதம் விளாசிய அவர் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது சதத்தால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.
200 என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. ஸ்மிருதி மந்தனா 18 ரன்களில் அவுட் ஆக, ரிச்சா கோஷ் தனி ஆளாகப் போராடி 50 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் ஆர்சிபி அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எட்ட முடிந்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் போராடி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோல்வியை தழுவி உள்ளது.