செய்திகள்

டெங்கு-பன்றி காய்ச்சலால் 27 பேர் இறந்துள்ளனர்- மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

Published On 2018-11-20 10:16 GMT   |   Update On 2018-11-20 10:16 GMT
டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு 27 பேர் இறந்துள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. #HCMaduraiBench #Dengue #SwineFlu
மதுரை:

தமிழகத்தில் டெங்கு, பன்றிகாய்ச்சல் உள்ளிட்ட உயிரை பாதிக்கும் காய்ச்சல்கள் வேகமாக பரவி வருவதாகவும், இதில் பாதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்துள்ளனர்.

எனவே டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல்களை கட்டுபடுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைப்பதை உறுதிப்படுத்துவதோடு, சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலில் எத்தனை பேர் இறந்துள்ளனர்? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நவம்பர் 19-ந் தேதி வரை தமிழகத்தில் டெங்குவால் 13 பேரும், பன்றிக்காய்ச்சலால் 27 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெங்கு காய்ச்சலால் 3,440 பேரும், பன்றி காய்ச்சலால் 1,745 பேரும் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்றும் தமிழக அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து அருகாமையில் உள்ள கோழிக்கோடு, காளகஸ்தி உள்ளிட்ட இடங்களில் டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த எது மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்து, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழகத்தில் மேற்கொள்ளலாமே என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர் தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல்களை கட்டுப்படுத்த, தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #HCMaduraiBench #Dengue #SwineFlu
Tags:    

Similar News