பொங்கல் அன்று நடக்க உள்ள சி.ஏ. தேர்வு தேதியை மாற்றவேண்டும்: சு வெங்கடேசன் எம்.பி.
- பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்தது.
- இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மதுரை:
பொங்கல் பண்டிகை நாட்களில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில் தேர்வு அட்டவணையை மாற்றி அறிவிக்குமாறு இந்தியப் பட்டய கணக்காளர் கழகத்திற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் (15, 16, 17 ஜனவரி 2026) நாட்களில் இந்திய பட்டய கணக்காளர் கழகம் இடையீட்டு தேர்வு மற்றும் இறுதித் தேர்வுகளை அறிவித்துள்ளது.
இது தேர்வர்களுக்கு கடும் சிரமங்களை உருவாக்கும் என என்னிடம் முறையீடுகள் வந்தன.
பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் தேதிகளில் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றி அறிவிக்குமாறு இந்திய பட்டய கணக்காளர் கழக தலைவர் சரண் ஜோத் சிங் நந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.