செய்திகள்

செல்போன் கொள்ளை- முதியவரை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற 2 மாணவர்கள் கைது

Published On 2018-10-17 06:39 GMT   |   Update On 2018-10-17 06:39 GMT
போரூர் அருகே செல்போன் கொள்ளையின் போது முதியவரை மோட்டார்சைக்கிளில் இழுத்து சென்ற 2 வாலிபர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். #Cellphonerobbery
போரூர்:

விருகம்பாக்கத்தை அடுத்த மேட்டுக்குப்பம் புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (66). கருப்பட்டி வியாபாரி.

நேற்று முன்தினம் ஜெயபாண்டியன், வளசரவாக்கம் மெஜஸ்டிக் காலனியில் உள்ள தனது நண்பரை பார்க்கச் சென்றார். அங்கிருந்து திரும்பும் போது, ஸ்கூட்டரில் வந்த 2 பேர் ஜெயபாண்டியனிடம் முகவரி கேட்டனர்.

அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, ஜெயபாண்டியனின் சட்டைபையில் இருந்த செல்போனை, ஸ்கூட்டரின் பின்னால் இருந்தவர் திடீர் என பறித்தார். இருவரும் தப்பிச் செல்ல முயன்றனர்.

சுதாரித்துக் கொண்ட ஜெயபாண்டியன், கொள்ளையர்கள் இருந்த ஸ்கூட்டரின் பின்பக்கம் உள்ள கைப்பிடியை பிடித்துக் கொண்டார். ஸ்கூட்டரை நிறுத்தி போனை மீட்க முயற்சித்தார்.

அப்போது கொள்ளையர்கள் ஸ்கூட்டரை வேகமாக ஓட்டினார்கள். இதனால் முதியவர் தடுமாறி கீழே விழுந்தார். ஆனால், ஸ்கூட்டரை நிறுத்தாமல் ஓட்டினார்கள். இதனால் ஜெயபாண்டியன் ஸ்கூட்டருடன் சிறிது தூரம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்.

கை, கால் தரையில் உரசியதால் ரத்தம் கொட்டியது. எனவே ஸ்கூட்டரை நிறுத்தி கொள்ளையர்களை பிடிக்கும் அவரது முயற்சி தோல்வி அடைந்தது. கைப்பிடி நழுவி ஜெயபாண்டியன் கீழே விழுந்தார். கொள்ளையர்கள் தப்பி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசில் ஜெயபாண்டியன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இந்த செல்போன் பறிப்பில் 3 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் துப்பு துலக்கினார்கள். இதில் ஆழ்வார் திருநகரை சேர்ந்த கல்லூரி மாணவர் சக்திவேல் (18). 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன், இவர்களுடைய கூட்டாளியான விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் ஊழியர் சிவா (18) ஆகியோர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, 2 மாணவர்கள் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த செல்போன், வழிப்பறி செய்வதற்கு பயன்படுத்திய ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் ஏற்கனவே இது போன்ற வழிப்பறி சம்பவங்களில் தொடர்பு உள்ளவர்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.#Cellphonerobbery
Tags:    

Similar News