செய்திகள்

மானாமதுரை அருகே இரட்டைக்கொலை: உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு

Published On 2018-05-30 04:27 GMT   |   Update On 2018-05-30 04:27 GMT
மானாமதுரை அருகே இரட்டைக்கொலை விவகாரத்தில் உடல்களை வாங்க மறுத்து விடிய விடிய உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கோவில் திருவிழாவின் போது 2 பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர், கச்சநத்தம் கிராமத்திற்கு ஆயுதங்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த மோதலில் கச்ச நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மருது என்ற சண்முகநாதன், ஆறுமுகம் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். சுகுமார், மலைச்சாமி, தனசேகரன், மகேசுவரன், சந்திரசேகர், தேவேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்

அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் பலியான 2 பேரில் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டன.

இதனால் பலியான மற்றும் காயம் அடைந்தவர்களின் உறவினர்களும் மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கலெக்டர் அலுவலக சாலையோரம் சென்ற அவர்கள், விடிய விடிய அங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என அவர்கள் கூறி வருவதால் ஆஸ்பத்திரி சாலை பதட்டமாகவே உள்ளது.#tamilnews
Tags:    

Similar News