என்னுடைய காலை உடைக்க முயற்சி செய்தீர்கள்: பாகிஸ்தான் நெட்-பவுலரை பாராட்டிய ரோகித் சர்மா
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி துபாய் சென்றுள்ளது.
- நெட் பயிற்சியில் 2 பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசினர்.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி துபாய் சென்றுள்ளது. இந்த அணி பயிற்சி ஆட்டம் எதிலும் விளையாடவில்லை. அதற்குப் பதிலாக நெட் பயிற்சியில் ஈடுபட்டது.
நெட் பயிற்சியின்போது இரண்டு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெட்டில் பந்து வீசியுள்ளனர். இருவரும் அபாரமான வேகப்பந்து வீச்சால் இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டியுள்ளனர்.
குறிப்பாக அவைஸ் அகமது யார்க்கர் பந்து மூலம் தனது காலை உடைக்க முயற்சி செய்தார் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவைஸ் அகமதிடம் ரோகித் சர்மா கூறுகையில், "நீங்கள் (அவைஸ் அகமது) டாப்-கிளாஸ் பவுலர். உங்களுடைய இன்ஸ்விங் யார்க்கர்களால் என்னுடைய காலை உடைக்க முயற்சி செய்தீர்கள். வெல் டன்! நீங்கள் இங்கே வந்து எங்களுக்கு உதவியதற்காக நன்றி" என தெரிவித்துள்ளார்.
மேலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:
அவைஸ் அகமது மற்றும் அவருடன் வந்த வாசிம் அக்ரம் ஆகிய இரண்டு பேரும் உண்மையிலேயே நல்ல பந்து வீச்சாளர்கள்.
இருவரும் சிறப்பாக பந்து வீசியதாக எங்கள் பேட்ஸ்மேன்கள் சொன்னதைக் கேட்டேன். அவர்களுடன் பேசுவதற்கு எங்களுக்கு சிறிது நேரம் கிடைத்தது. அவர்கள் துபாயில் வசித்து வருகிறார்கள்.
அவர்களைப் பற்றி எங்களுக்கு அதிகமாக தெரியாது. அவர்களை நாங்கள் முதன்முறையாக பார்த்தோம். இருவரும் உண்மையிலேயே தரமான பந்து வீச்சாளர்கள் என தெரிவித்தார்.
"ஷாஹீன் ஷா பந்து வீசுவதைப் போன்று நான் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு பந்து வீசினேன். அவர்கள் என்னை பாராட்டினார்கள்" என அவைஸ் அகமது குறிப்பிட்டார்.