ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் சுப்மன் கில் முதல் இடம்: பாபர் அசாமை பின்னுக்கு தள்ளினார்
- சுப்மன் கில் 796 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
- பாபர் அசாம் 776 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு பின்னடைந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கமிட்டி (ICC) வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி இந்திய தொடக்க வீரர் சுப்மன் கில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட தரவரிசையின்போது சுப்மன் கில் 2-வது இடம் பிடித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் சதம் விளாசியதன் மூலம் தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். சுப்மன் கில் 796 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் பாபர் அசாம் சிறப்பான விளையாடவில்லை. இதனால் 776 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா கடந்த வாரம் 3-வது இடத்தில் இருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் 761 புள்ளிகளுடன் அதே இடத்தில் நீடிக்கிறார்.
தென்ஆப்பிரிக்க வீரர் கிளாசன் 756 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 2 இடங்களில் முன்னேறி 740 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி 727 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் நீடிக்கிறார்.
ஷ்ரேயாஸ் அய்யர் 679 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். அயர்லாந்து வீரர் டெக்கர் 7-வது இடத்தையும், இலங்கை வீரர் அசலங்கா 8-வது இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.