சிறப்புக் கட்டுரைகள்
null

கர்ப்ப காலம், பிரசவ நேரம்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Published On 2025-09-17 15:00 IST   |   Update On 2025-09-17 15:00:00 IST
  • வீட்டில் பிரசவம் பார்க்கும்போது பல பெண்களும், குழந்தைகளும் உயிரிழக்கிறார்கள்.
  • கர்ப்பமாக இருக்கும்போது குங்குமப்பூ நிறைய சாப்பிட்டு அதனால் பிரச்சனைகளை சந்தித்தவர்கள் தான் அதிகம்.

தாய்மை அடையும் நேரம் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம் ஆகும். எனவே பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலகட்டம் என்பது கர்ப்பகாலம் மற்றும் பிரசவ நேரம் ஆகியவை தான். இதைத்தான் ஒவ்வொரு பெண்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்குகிறார்கள். அந்த அளவுக்கு கர்ப்பம், பிரசவம் ஆகியவை பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு வயதில் மூத்த பெண்கள் கூறும் தவறான அறிவுரைகள்:

கர்ப்ப காலமும், பிரசவ நேரமும் எல்லா பெண்களுக்கும் மகிழ்ச்சியான காலகட்டமாக அமைவதில்லை. கர்ப்பம், பிரசவம் ஆகியவை பெண்கள் மட்டுமே சந்திக்கும் பிரத்தியேகமான விஷயங்கள் ஆகும். இந்த விஷயங்களில் பெண்கள் பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகள் பலருக்கும், வயதில் மூத்த பெண்கள் பலரும் பல்வேறு அறிவுரைகளை கூறுவார்கள்.

ஆனால் அந்த அறிவுரைகளில் சரியான விஷயங்களும் இருக்கும், சில நேரங்களில் தவறான விஷயங்களும் இருக்கும். அதாவது தவறான விஷயங்களை தவறு என்று அறியாமலேயே அவர்கள் சரியானது என்று கூறுவார்கள். அப்படி நிறைய விஷயங்கள் கர்ப்பிணிகளின் காதில் வந்து விழும்.

ஆனால் இவற்றில் எது நல்லது? எது கெட்டது என்பது பல நேரங்களில் அந்த கர்ப்பிணி பெண்கள் அறியாத ஒரு முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் இதைப்பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இன்றைக்கு ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற முக்கியமான விஷயமான கர்ப்பம் மற்றும் பிரசவம் என்பது மிகவும் சீரான முறையில், நல்ல முறையில் இருக்க வேண்டும். அந்த கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தம் எதுவும் இல்லாமல், நல்ல மகிழ்ச்சியோடு இருந்தால் கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும். பிரசவத்தின்போது தாய் சேய் இருவரும் பாதுகாப்பாகவும் இருக்க முடியும்.

இந்த வகையில் கர்ப்ப காலத்தின்போது பெண்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் ஆகியவை எக்கச்சக்கம் இருக்கிறது. மேலும் சமுதாய ரீதியாக ஏற்படும் பல பிரச்சனைகளும் கர்ப்பிணி பெண்களின் வாழ்க்கையில் பங்கு வகிக்கிறது.

வீட்டிலேயே பிரசவம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:

மருத்துவத்துறை இப்போது எவ்வளவோ முன்னேறியுள்ளது. ஆனால் இந்த காலகட்டத்திலும் வீட்டில் பிரசவம் பார்க்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிரசவம் எங்கு, எப்படி, யாரால் பார்க்கப்படுகிறது என்று கடந்த 2018-ம் ஆண்டிலேயே உலக அளவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் நிறைய பேர் வீட்டில் பிரசவம் பார்க்கிறார்கள் என்பதை கண்டறிந்து உள்ளனர். இன்றும் நிறைய பேர் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதை நாம் கேள்விப்படுகிறோம். யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்தேன் என்று நிறைய பேர் கூறுகிறார்கள்.

பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்கு போனால் குளுக்கோஸ் ஏற்றுகிறார்கள், ஊசி போடுகிறார்கள், சிசேரியன் அறுவை சிகிச்சை செய்கிறார்கள், தையல் போடுகிறார்கள் என்பது அவர்களின் ஆதங்கமாக இருக்கிறது. பிரசவம் என்பது இயற்கையாக ஏற்படுவது தானே? கர்ப்பம் இயற்கையாக உருவாகும் நிலையில், பிரசவமும் இயற்கையாகத்தானே இருக்க வேண்டும் என்பது போன்று பலரது கருத்துக்கள் உள்ளன.

அந்த கருத்துக்களில் தவறு இல்லை என்றாலும் கூட, அதை முழுக்க முழுக்க சரியென்று பலரும் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்த காலத்தில் வீட்டில் பிரசவம் ஆகவில்லையா என்கிற நம்பிக்கையோடு, தேவையில்லாமல் மருத்துவரை பார்க்க வேண்டாம் என்று எண்ணி, வீட்டிலேயே பிரசவம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை இப்போதும் அதிகமாக உள்ளது.

இதைத்தான் அந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. அந்த ஆய்வுகளில் சொல்லியிருக்கக்கூடிய விஷயம், படித்தவர்கள் நிறைய பேர் வசிக்கும் சுவீடன் போன்ற நாடுகளில் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 0.1 சதவீதமாக உள்ளது.

ஆனால் மலேசியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வீட்டில் பிரசவம் பார்ப்பது 19 முதல் 20 சதவீதமாக இருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதில் ஒரு விஷயத்தை மட்டும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பதை தவிருங்கள்:

வீட்டில் பிரசவம் பார்த்தவர்களில், பிரசவம் சரியாக நடந்த ஒருவர் வேண்டுமானால் அதை யூடியூப்பில் போடலாம். ஆனால் வீட்டில் பிரசவம் பார்க்கும்போது பல பெண்களும், குழந்தைகளும் உயிரிழக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருமே அதை யூடியூப்பில் போடுவதில்லை. ஏனென்றால் யூடியூப்பை பார்த்து பிரசவம் பார்க்கும்போது தாயும், குழந்தையும் ஒருவேளை இறக்க நேரிட்டால் அது மிகப்பெரிய பிரச்சனையாகி விடும். எனவே யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பதை தவிருங்கள்.

அந்த வகையில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், ஒரு கர்ப்ப காலத்தில் பலரும் பலவிதமான மாற்றுக் கருத்துக்களை கூறுவார்கள். இன்றைக்கும் அந்த காலத்து பெரியவர்கள் சிலர் சொல்லுவார்கள். நாங்கள் அந்த காலத்தில் வீட்டில் தான் பிரசவம் பார்த்தோம். இன்றைக்குத் தான் பெரிய பெரிய மருத்துவமனைகள் வந்துள்ளன. பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றால் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து விடுவார்கள். இப்படி சொல்கின்ற அந்தக்கால பெண்கள் அதிகம்.

காலம் காலமாக பழகி வந்த கலாசாரம் மற்றும் அவர்களுடைய சமூக பழக்க வழக்கம் ஆகியவற்றை பின்பற்றி கர்ப்பிணியாக இருக்கும் பெண்களுக்கு அந்த காலத்து பெண்கள் நிறைய அறிவுரைகளை சொல்வார்கள். நான் நிறைய பெண்களுக்கு பிரசவம் பார்த்திருக்கிறேன். எனக்கு தெரியாதா என்று விமர்சனம் செய்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அவர்கள் இப்படி விமர்சனம் செய்வதற்கு அறிவியல் ரீதியாக பிரசவம் பற்றிய புரிதல் இல்லாததுதான் முக்கியமான காரணம் ஆகும். கர்ப்பம் மற்றும் பிரசவம் என்கின்ற இயற்கையான விஷயத்தின் அறிவியல் அடிப்படையே அவர்களுக்கு தெரிவதில்லை. இது தொடர்பான புரிதல் என்பது மிகவும் முக்கியம்.

அந்த புரிதல் இல்லாததால் தான் பிரசவத்தின்போது வருகிற சவால்கள், என்ன நடக்குமோ என்கிற குழப்பங்கள், இதனால் வருகிற பாதிப்புகள் பற்றி தெரியாமல், நிறைய பேர் ஒரு சில விஷயங்களை மட்டும் தெரிந்து கொண்டு வீட்டிலேயே பிரசவம் பார்க்கிறார்கள்.

மேலும் பிரசவம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்கிற தவறான கருத்துக்களையும் சொல்கிறார்கள். அதனால் தான் இன்றைக்கு கர்ப்ப காலத்தில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது.

குங்குமப்பூ அதிகம் சாப்பிட்டால் கருச்சிதைவு அபாயம்:

இதேபோல் கர்ப்ப காலத்தின்போது பெண்களுக்கு, எல்லோரும் பலவிதமான அறிவுரைகளை சொல்வார்கள். நான் இதைத்தான் சாப்பிட்டேன், எனது குழந்தை நல்ல கலராக இருந்தது. நான் இதை சாப்பிட்டேன், குழந்தை மோசமாக இருந்தது என்பார்கள்.

இந்த மாதிரி பலவிதமான உணவு பழக்க வழக்க முறைகளிலும், வாழ்க்கை முறைகளிலும், அவர்கள் என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை தங்களுடைய அனுபவத்தில் இருந்து, இதுதான் சரி என்று எண்ணி, தவறான கருத்துக்களை சொல்வது இன்னும் அதிகமாக இருக்கிறது.

இன்றைக்கும் சமூக வலைதளத்திலோ அல்லது யூடியூப்களிலோ யாராவது எளிதாக சொல்லி விடுவார்கள். நான் கர்ப்பமாக இருக்கும்போது இதைத்தான் சாப்பிட்டேன், அதனால் எனது குழந்தை நல்ல கலராக இருந்தது என்று பதிவிடுவார்கள். ஆனால் அது உண்மையான தகவலாக இருக்காது.

அந்த காலத்தில் குங்குமப்பூ சாப்பிட்டால் தான் குழந்தை நல்ல கலராக இருக்கும் என்பார்கள். ஆனால் கர்ப்பமாக இருக்கும்போது குங்குமப்பூ நிறைய சாப்பிட்டு அதனால் பிரச்சனைகளை சந்தித்தவர்கள் தான் அதிகம். ஏனென்றால் குங்குமப்பூவில் இருக்கிற பல விதமான விஷயங்கள் கருவுக்கும், கரு வளர்ச்சிக்கும் பிரச்சனையாக இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்ட தகவல் ஆகும்.

இந்த வகையில் கருச்சிதைவு என்பது குங்குமப்பூ அதிகம் சாப்பிடுவதால் ஏற்படுகிறது என்பதை பல ஆய்வுகளில் உறுதி செய்திருக்கிறார்கள். ஆனால் இது தெரியாமல் நிறைய பேர் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை அழகாக இருக்கும், நல்ல நிறமாக இருக்கும் என்கிறார்கள்.

இதெல்லாம் தவறான கருத்துக்கள். இப்படி பலரும் சமூக ஊடகத்தில் சொல்லும் தவறான கருத்துக்கள் மற்றும் தவறான தகவல்களை, கர்ப்பிணிகள் சரியானது என்று கருதி, அதை பயன்படுத்தி, அதனால் பலவித பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

குங்குமப்பூ விஷயம் போலவே, அடுத்ததாக கர்ப்ப காலத்தில் என்னென்ன சாப்பிட வேண்டும், என்னென்ன சாப்பிடக்கூடாது என்கிற சந்தேகங்கள் நிறைய கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கிறது. அதுபற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

Tags:    

Similar News