த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைந்தது அக்கட்சிக்கு பலம் சேர்க்கும்- தமிழிசை சவுந்தரராஜன்
- தமிழகத்தில் தி.மு.க. நாகரீகமான அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும்.
- எது நடந்தாலும் பா.ஜ.க. தான் என்று தி.மு.க. சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.
புதுச்சேரி:
தமிழக பா.ஜ.க, முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவில் மற்றும் பாகூர் மூலநாதர் சாமி கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மிகவும் மோசமாக இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு மிக மிக மோசமாக உள்ளது. உதயநிதி பிறந்த நாளில் செலுத்துகின்ற கவனம் மற்ற குழந்தைகளை பாதுகாப்பதில் இல்லை. எனவே வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சபாநாயகர் அப்பாவு போன்றவர்கள் கூட மிகவும் தவறாக பேசுகிறார்கள். நடுநிலையாக இருக்க வேண்டிய அவர் கவர்னரை பற்றி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கருத்து வேறுபாடு இருந்தால் கருத்தை சொல்லுங்கள், அதற்கு வார்த்தைகளை தவறாக பயன்படுத்தக்கூடாது.
தமிழகத்தில் தி.மு.க. நாகரீகமான அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும்.
முன்னாள் அமைச்சர் செங்கேட்டையன், விஜய்யின் கட்சியில் இணைந்திருப்பதை அரசியல் நகர்வாகத்தான் நான் பார்க்கின்றேன். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவருக்கென்று ஒரு பாதையை தேர்ந்தெடுத்திருக்கின்றார்.
செங்கோட்டையன் அனுபவமான அரசியல்வாதி, அவர் இணைந்தது தமிழக வெற்றி கழகத்துக்கு பலம் சேர்க்கும். மற்றப்படி அ.தி.மு.க.- பா.ஜ.க கூட்டணி பலம் பொருந்தியதாகத்தான் இருக்கிறது. நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சனை குறித்து நான் பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
எது நடந்தாலும் பா.ஜ.க. தான் என்று தி.மு.க. சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். செங்கோட்டையன் அவராகவே ஒரு முடிவை எடுத்துள்ளார். அந்த முடிவுக்கும் பா.ஜ.க. தான் காரணம் என்று சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். அப்படியானால் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பா.ஜ.க. தான் காரணமா? தமிழகத்தில் எது நடந்தாலும் பா.ஜ.க. தான் காரணமா?
பா.ஜ.க.வை பார்த்து தி.மு.க.வும், இந்தியா கூட்டணியும் மிரண்டு போய் உள்ளனர்.
பா.ஜ.க.-அதிமுக கூட்டணி பலமாக இருக்கிறது. நாங்கள் அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம். அதில் பிரச்சனை வந்தால் அதற்கு பா.ஜ.க. பொறுப்பல்ல. இன்னும் பலர் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்பது எங்களின் விருப்பம். எதிர்கட்சியின் வாக்குகள் சிதறக்கூடாது. சிதறாமல் ஒரு வியூகம் அமைக்க வேண்டும். சில சலசலப்புகளினால் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்தை யாரும் குறைத்து மதிப்பிட கூடாது. குறையவும் குறையாது.
செங்கோட்டையன், விஜய், டி.டி.வி.தினகரன், ஓ. பன்னீர்செல்வம் என யாராக இருந்தாலும் எல்லோருக்கும் ஒரு கடமை இருக்கிறது. அந்த கடமை தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தாண்டி தி.மு.க.வை வேரறுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும். அந்த வியூகத்துக்குள் எல்லோரும் வர வேண்டும்.
புதுவையில் 15 ஆண்டுகாலம் இடைக்கால பட்ஜெட் தான் போடப்பட்டது. முழுநேர பட்ஜெட் நாம் வந்த பிறகுதான் போடப்பட்டது. அது இரட்டை இஞ்சின் அரசாங்கத்தால் தான் நடந்தது. ஆகவே இரட்டை இஞ்சின் இன்னும் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.