வீட்டில் பிரசவம் பார்க்கப்பட்ட இளம்பெண் மரணம் - கணவர் தலைமறைவு
- கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளனர்.
- பிரசவம் நடந்தபிறகு ஜெஸ்வீனா திடீரென மயங்கினார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராசிகுல். இவரது மனைவி ஜெஸ்வீனா (வயது30). இவர்களுக்கு 4 வயதில் ஜோஹிருல் என்ற மகன் இருக்கிறான். ராசிகுல் தனது மனைவி மற்றும் மகனுடன் கேரளாவில் வாழ்ந்து வந்தார். கூலி வேலைகளுக்கு சென்று தனது மனைவி மற்றும் மகனை காப்பாற்றி வந்தார்.
இந்தநிலையில் ஜெஸ்வீனா மீண்டும் கர்ப்பமானார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராசிகுல் தனது மனைவி மற்றும் மகனுடன் கண்ணூர் மாலோடு பகுதியில் ஒரு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த ஜெஸ்வீனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்தில் அவருக்கு அழகிய குழந்தை பிறந்தது. இந்தநிலையில் பிரசவம் நடந்தபிறகு ஜெஸ்வீனா திடீரென மயங்கினார். சுயநினைவை இழந்த அவரை அவரது குடும்பத்தினர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு ஜெஸ்வீனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் தலைமறைவாகினர். ஜெஸ்வீனாவுக்கு புதிதாக பிறந்த குழந்தை மற்றும் மகன் ஜோஹிருல் ஆகியோரை தனியாக தவிக்க விட்டுவிட்டு அவர்கள் மாயமாகினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்பு ஜெஸ்வீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு புதிதாக பிறந்த குழந்தையை மீட்டு பரியாரத்தில் உள்ள கண்ணூர் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவரது மகன் ஜோஹிருலை சைல்டு லைன் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவன் அவர்களது பராமரிப்பில் உள்ளான்.
வீட்டில் பிரசவம் பார்த்ததால் பெண் இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் ஜேஸ்வீனாவின் கணவர் மற்றும் குடும்பத்தினரை போலீசார் தேடி வருகிறார்கள்.