இந்தியா

இந்தியா- பாகிஸ்தான் மோதலை நிறுத்தினேன் எனக்கூறும் டிரம்ப்: பிரதமர் மோடி மவுனம் கலைப்பது எப்போது?- காங். கேள்வி

Published On 2025-05-31 15:08 IST   |   Update On 2025-05-31 15:08:00 IST
  • இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்த முக்கிய பங்கு வகித்தேன் என தொடர்ந்து டிரம்ப் கூறி வருகிறார்.
  • இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்த பேச்சுவார்த்தையில் 3ஆவது நாடு இடம் பெறவில்லை என இந்தியா தெரிவித்து வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியாவின் முப்படைகள் ஒன்றாக இணைந்து தாக்குதல் நடத்தி அழித்தன. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. அத்துடன் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்ததுடன், பதிலடியும் கொடுத்து வந்தது.

கடந்த 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் கடந்த 10ஆம் தேதி மதியம், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்திக் கொள்ள ஒப்புக்கொண்டன. இரவு முழுவதும் அமெரிக்க இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என இந்தியா தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று, வர்த்தகத்தை காரணம் காட்டி இந்தியா- பாகிஸ்தான் இடையிலான அணுஆயுத போர் சூழலை நிறுத்தியது பெருமையான ஒப்பந்தம் என டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி மவுனம் கலைப்பது எப்போது என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில், பிரதமர் மோடி என்னுடைய சிறந்த நண்பர். இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முக்கிய பங்கு வகித்தேன் என டொனால்டு டிரம்ப் பேசிய விடியோவை டேக் (Tagged) செய்து. பிரதமர் மோடி பேசுவது எப்போது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

"3 நாடுகள், 3 இடங்களில் 20 நாட்களில் 9 முறை இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போரை 4 நாட்களில் நிறுத்தியதாக டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

ஆனால் டொனால்டு டிரம்பின் நண்பர் நரேந்திர மோடி, முற்றிலும் மவுனத்துடன் அவரது கருத்தை புறந்தள்ளி வருகிறார். பிரதமர் மோடி ஏன் பேசவில்லை. பிரதமர் மோடி எப்போதும் செய்வதைத்தான் டொனால்டு டிரம்ப் செய்கிறார். அவ்வளவு சிறப்பாக பொய் சொல்கிறாரா? அல்லது 50 சதவீதம் உண்மை பேசுகிறாரா?" என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News