இந்தியா

பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 8 மாநிலங்களில் முறைகேடு- தணிக்கை அறிக்கையில் தகவல்

Published On 2025-12-21 09:28 IST   |   Update On 2025-12-21 09:28:00 IST
  • திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்றவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.500 வரவு வைக்கப்படுகிறது.
  • திறன் மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து ரூ.12.16 கோடியை சம்பந்தப்பட்ட அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.

பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 8 மாநிலங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகத்தின்(சி.ஏ.ஜி.) தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதமரின் கவுஷல் விகாஸ் யோஜனா என்கிற திட்டம் மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தை தேசிய திறன் மேம்பாட்டுக்கழகம் மேற்பார்வை செய்து வருகிறது.

அசாம், பீகார், ஜார்கண்ட், மராட்டியம், கேரளா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் இந்த திட்டத்தில் நிதி முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மோசமான நிதி மேலாண்மை, மாணவர் சேர்க்கையில் குளறுபடி நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்றவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.500 வரவு வைக்கப்படுகிறது.

95.90 லட்சம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் 90.66 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வங்கிக்கணக்குகளில் இந்த நிதி உதவி வரவு வைக்கப்படவில்லை. பலரின் வங்கி கணக்குகளில் 2 முறை மற்றும் அதற்கு மேலான தடவையும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து திறன் மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து ரூ.12.16 கோடியை சம்பந்தப்பட்ட அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News