மேற்கு வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பிச் சென்ற பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!
- இதனால் அவர் இந்த பொதுக்கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசுவார் என்று தெரிகிறது.
- பிரதமர் இன்று மாலை அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இன்று பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மேற்கு வங்கம் வந்துள்ளார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள தஹெர்பூர் பகுதியில் நடைபெறவிருந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பினார்.
ஆனால் அங்கு நிலவும் அடர் மூடுபனி மற்றும் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் அவரது ஹெலிகாப்டர் கொல்கத்தா விமான நிலையத்திற்கே திரும்பியது.
அடர் மூடுபணியால் தெரிவுநிலை குறைந்து சிறிது நேரம் வானிலேயே வட்டமடித்த ஹெலிகாப்டர், பாதுகாப்பு கருதி மீண்டும் கொல்கத்தா விமான நிலையத்திற்கே கொண்டு செல்லப்பட்டது. இதனால் அவர் இந்த பொதுக்கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசுவார் என்று தெரிகிறது.
இந்தப் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து, பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் இன்று மாலை அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.