இஸ்லாமியர்களை அசாம் முதல்வர் துப்பாக்கியால் குறிபார்க்கும் வீடியோ - பினராயி விஜயன் கண்டனம்
- இஸ்லாமிய அடையாளம் கொண்ட இருவரின் மீது பிஸ்வாவின் துப்பாக்கி சுடுவதற்கு குறி வைக்கப்பட்டது பொன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
- "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" போன்ற வாசகங்கள் ஆங்கிலத்திலும் அசாமி மொழியிலும் இடம்பெற்றுள்ளன.
அசாம் மாநிலத்தில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் அசாம் பாஜக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த இஸ்லாமிய வெறுப்பு வீடியோ கண்டனத்தை குவித்து வருகிறது.
"Point Blank Shot" என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், முதல்வர் பிஸ்வா கையில் ரைபிள் துப்பாக்கியை எடுத்து குறிபார்க்கிறார், அடுத்த காட்சியில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குல்லாய், தாடி உள்ளிட்ட இஸ்லாமிய அடையாளம் கொண்ட இருவரின் மீது பிஸ்வாவின் துப்பாக்கி சுடுவதற்கு குறி வைக்கப்பட்டது பொன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
வீடியோவின் பின்னணியில் "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" போன்ற வாசகங்கள் ஆங்கிலத்திலும் அசாமி மொழியிலும் இடம்பெற்றுள்ளன.
முதல்வர் பிஸ்வா அசாம் இஸ்லாமிய சமூகம் குறித்து தொடர்ந்து கடுமையான கருத்துக்களை கூறியும், நடவடிக்கை எடுத்தும் வரும் சூழலில் இந்த வீடியோ கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வ சர்மாவின் விடியோ மியா சமூகத்தின் மீதான நேரடி வன்முறையைத் தூண்டும் அதிர்ச்சியளிக்கக்கூடிய செயல்.
தேர்தல் லாபத்துக்காக வெறுப்புணர்வை இயல்பானதாக மாற்ற துடிக்கும் முயற்சிகள் நமது அரசமைப்புக்கான தீங்கு விளைவிக்கும். இந்த விவகாரத்தில் பாஜக தேசிய தலைமையின் மௌனம் பிளவுவாத அரசியல் மீதான அவர்களின் பற்றைத் தெளிவாக்குகிறது.
இத்தகைய வகுப்புவாத வெறுப்புணர்வு செயல்களை எதிர்க்க மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் கட்டாயம் ஒன்றிணைய வேண்டும். இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.