இந்தியா

சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: ஜெயராம் 17-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு

Published On 2026-02-10 09:57 IST   |   Update On 2026-02-10 09:57:00 IST
  • தங்கம் திருட்டு விவகாரத்தில் கள்ள பணம் மோசடி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
  • பழைய கொடி மரத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள துவார பாலகர் சிலையில் பூசப்பட்ட தங்க முலாம்களை சுத்தப்படுத்தி மீண்டும் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக அந்த சிலைகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்தப்படுத்தும் பணி முடிந்து மீண்டும் சபரிமலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் பணியின்போது துவாரபாலகர் சிலையில் உள்ள தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்.ஐ.டி.) கேரள ஐகோர்ட்டு நியமித்தது.

இந்தக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி துவார பாலகர் சிலைகளை முலாம் பூச எடுத்துச் சென்ற உன்னி கிருஷ்ணன் போற்றியை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கர்நாடகாவை சேர்ந்த நகை வியாபாரி கோவர்த்தன் மற்றும் சபரிமலை கோவில் தேவசம்போர்டு முன்னாள் நிர்வாகிகள் உள்பட பலரை கைது செய்தது. இதற்கிடையில் தங்கமுலாம் பூசப்பட்ட பிறகு துவாரபாலகர் சிலைகள், சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட தகவல் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கிடைத்தது. இது தொடர்பான படங்களும் வெளிவந்தன. இதனை தொடர்ந்து நடிகர் ஜெயராமுக்கு தங்கம் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த நடிகர் ஜெயராம், உனனிகிருஷ்ணன் போற்றியை எனக்கு தெரியும். கோவில் தங்க நகைகளை வீட்டிற்கு கொண்டு வந்தது உண்மை தான். அதனை வீட்டில் வைத்து பூஜை செய்தால், செழிப்பை தரும் என்று உன்னி கிருஷ்ணன் போற்றி கூறியதால், தனது வீட்டில் வைத்து பூஜை செய்ததாகவும், கோவிலில் நடைபெற்ற பூஜையிலும் தான் பங்கேற்றதாகவும் தெரிவித்தார். மேலும் உன்னியிடம் இருந்து நான் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நோட்டீசு அனுப்பியிருந்தது. தொடர்ந்து 2 வாரங்களுக்கு முன்பு அந்த குழுவினர், சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டுக்குச் சென்று அவரிடம் வாக்குமூலம் பெற்றது. அப்போது ஜெயராம், ஏற்கனவே தான் தெரிவித்திருந்ததை அவர்களிடம் தெரிவித்தாராம்.

இந்த நிலையில் தங்கம் திருட்டு விவகாரத்தில் கள்ள பணம் மோசடி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் விசாரணையில் இறங்கி உள்ளனர். சென்னையில் துவார பாலகர் சிலையை தங்க முலாம் பூச கொண்டு செல்லப்பட்ட நிறுவனம் மற்றும் கைது செய்யப்பட்ட திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் நிர்வாகிகள் வீடுகள் போன்ற பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். இதனால் தங்கம் திருட்டு வழக்கு விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது.

இந்த நிலையில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து அவருக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது. அடுத்த செவ்வாய்க்கிழமை (17-ந் தேதி) அமலாக்கத்துறை முன்பு ஆஜராகும்படி அதில் கூறப்பட்டுள்ளது. தங்கம் திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வு துறையை தொடர்ந்து அமலாக்கத்துறையும் நடிகர் ஜெயராமுக்கு நோட்டீசு அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழலில் தங்கம் திருட்டு வழக்கில் தனது விசாரணை அறிக்கையை கேரள ஐகோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்துள்ளது. அதில், மேலும் 3 பேருக்கு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் சபரிமலையில் தங்கம் திருடப்பட்டது என்பதை விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் உறுதி செய்த போதும், எவ்வளவு தங்கம் திருடப்பட்டது? இப்போது இருப்பது ஒரிஜினல் தங்கம் தானா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சபரிமலை கோவிலில் மீண்டும் ஆய்வு நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு கேரள ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் சபரிமலையில் கடந்த 2017-ம் ஆண்டு புதிய கொடிமரம் அமைக்கப்பட்டதிலும் முறைகேடு நடந்திருப்பதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு விஜிலன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழைய கொடிமரத்திற்கு சேதம் ஏற்பட்டதாக கூறி புதிய கொடிமரம் அமைக்க முடிவு செய்யபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பழைய கொடி மரத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை பரிசீலித்த ஐகோர்ட்டு, புதிய கொடிமரம் அமைக்கப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்த விஜிலன்சு துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அதுபற்றியும் சிறப்பு புலனாய்வுக் குழு கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News