இந்தியா

அன்னதான மண்டபத்தில் பக்தர்கள் சாப்பிட்ட போது எடுத்த படம்.

சபரிமலையில் இதுவரை 4¼ லட்சம் பேருக்கு அன்னதானம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம்

Published On 2022-12-04 02:52 GMT   |   Update On 2022-12-04 03:31 GMT
  • அன்னதான நிதியாக இதுவரை ரூ.50 லட்சம் கிடைத்துள்ளது.
  • தினசரி 22 ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் மூலம் பயன் பெற்று வருகிறார்கள்.

திருவனந்தபுரம் :

மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த மாதம் இறுதி வரை 8.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர்.இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நடப்பு சீசனையொட்டி இதுவரை சபரிமலை தரிசனத்திற்கு வந்த பக்தர்களில் 4¼ லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு உள்ளது. தினசரி சராசரியாக 22 ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் மூலம் பயன் பெற்று வருகிறார்கள்.

ஒரே நேரத்தில் 3,500 பக்தர்களுக்கு பந்தி பரிமாறும் வகையில் அன்னதான மண்டபம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. தினசரி காலை 6.30 மணி முதல் பகல் 11 மணி வரை உப்புமா, பருப்பு சாதம், சுக்குநீரும், பகல் 12 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை புலாவ், சாலட், சுக்குநீரும், மாலை 6.30 முதல் இரவு 11.15 வரை கஞ்சி மற்றும் சிறுபயறு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அன்னதான நிதியாக இதுவரை ரூ.50 லட்சம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு கிடைத்துள்ளது.

மண்டபத்தில் அன்னதானம் வழங்குவது குறித்த அறிவிப்பு பிற மாநில பக்தர்களுக்காக பிற மொழிகளிலும் வைக்கப்பட்டு உள்ளது. உணவை பரிமாறிய பிறகு பாத்திரங்களை சுத்தம் செய்ய மின்சார எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அன்னதான மண்டபத்தில் 230 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News