இந்தியா

தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்த டெல்லி அரசு உத்தரவு!

Published On 2025-12-29 14:37 IST   |   Update On 2025-12-29 14:37:00 IST
  • டெல்லி அரசின் இந்த உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
  • உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன

தேசிய தலைநகர் முழுவதும் உள்ள தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பள்ளி ஆசிரியர்களையும் பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பயிற்சிக்காக கல்வி நிறுவனங்களில் இருந்து நோடல் அதிகாரிகளை நியமிக்க அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் கல்வி இயக்குநரகம் (DoE) அறிவுறுத்தியுள்ளது.

பயிற்சியைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு சமர்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி அரசின் இந்த உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விலங்கு நல ஆர்வலர்கள், மற்றும் விலங்குகள் நலன் துறையைச் சார்ந்தவர்களுக்கு இந்தப் பணியை ஒதுக்காமல் தங்களுக்கு ஒதுக்குவது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கல்வி சாராத பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்துவது மாணவர்களின் கல்வியை பாதித்து, ஆசிரியர் தொழிலின் கண்ணியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் தெருநாய் கணக்கெடுப்புக்கு ஆசிரியர்களை நியமிக்கும் இதே போன்ற உத்தரவுகள்  பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது நாய் கணக்கெடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News