இந்தியா

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது நீதிமன்ற அவமதிப்பு இல்லை- உச்சநீதிமன்றம்

Published On 2023-11-29 06:09 GMT   |   Update On 2023-11-29 08:09 GMT
  • சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து அறநிலையத்துறை அமைச்சரே பங்கேற்றதற்கும், சனாதன தர்மத்தை ஒழிப்பதாக உதயநிதி பேசியதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
  • விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.

புதுடெல்லி:

சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கள் தொடர்பாக தமிழ்நாடு போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே மத வெறுப்பு பேச்சு தொடர்பாக அளித்த தீர்ப்புக்கு எதிராக இந்த பேச்சு உள்ளது என்றும் தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மத வெறுப்பு பேச்சுக்கு எதிரான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பாட்டியா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு எதிராக அமித்த சச்தேவா என்பவர் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அவர், 'ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு போலீசில் புகார் அளிக்கப்பட்டும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே இதை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதி மத வெறுப்பு பேச்சுக்கள் தொடர்பான மனுக்களுடன் இணைத்து விசாரிக்க வேண்டும்' என்று முறையிட்டார்.

அதற்கு நீதிபதிகள், 'மத வெறுப்பு பேச்சுக்கள் தொடர்பான மனுக்கள் தனித்தனியாக விசாரிக்கப்படும். அமைச்சர் உதயநிதி பேசிய சனாதனம் குறித்த பேச்சை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது. எனவே அதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. எனவே நீங்கள் ஐகோர்ட்டை நாடி மனுதாக்கல் செய்யுங்கள்' என்றும் வாய்மொழியான உத்தரவை பிறப்பித்து உள்ளனர்.

Tags:    

Similar News