இந்தியா

பாகிஸ்தானுக்கு போர் விமான இன்ஜின் வழங்கும் ரஷியா: மோடி அரசை விமர்சித்த காங்கிரஸ்

Published On 2025-10-05 08:31 IST   |   Update On 2025-10-05 08:31:00 IST
  • பாகிஸ்தானுக்கு ஜெட் என்ஜின்களை ரஷ்யா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • இது பிரதமர் மோடியினுடைய ராஜதந்திரத்தின் மற்றொரு தோல்வியை காட்டுகிறது.

பாகிஸ்தானின் JF-17 போர் விமானங்களுக்கு மேம்பட்ட RD-93MA ஜெட் என்ஜின்களை ரஷ்யா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒரு காலத்தில் இந்தியாவின் மிகவும் நம்பகமான கூட்டாளியாக இருந்த ரஷ்யா, மத்திய அரசின் வேண்டுகோள்களை புறக்கணித்து, பாகிஸ்தான் நாட்டுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட JF-17 போர் விமானங்களுக்கு மேம்பட்ட RD-93MA இயந்திரங்களை வழங்குவதற்கான காரணத்தை மோடி அரசாங்கம் விளக்க வேண்டும்.

ஆபரேஷன் சிந்தூரின் போது நமது நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானங்களில் JF-17 கூட இருக்கலாம் என்றும் இந்திய விமானப்படை தலைவர் தலைவர் கூறியுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் நேரடி தலையீடுகள் இருந்தபோதிலும் இந்த ஒப்பந்தம் முன்னேறி வருகிறது. இந்தியாவின் நீண்டகால மற்றும் நம்பகமான கூட்டாளியான ரஷ்யா இப்போது பாகிஸ்தானுக்கு இராணுவ ஆதரவை வழங்குவதற்கான காரணத்தை மத்திய அரசு நாட்டுக்கு விளக்க வேண்டும்.

இது பிரதமர் மோடியினுடைய ராஜதந்திரத்தின் மற்றொரு தோல்வியை காட்டுகிறது. பாகிஸ்தானை ராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்த இந்தியாவால் முடியவில்லை. பாகிஸ்தானின் இராணுவத் தளபதி அசிம் முனீரை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிகவும் அன்புடன் வரவேற்றார். தற்போது ரஷிய அதிபர் புதின் ஆயுதங்களை வழங்குகிறார்" என்று விமர்சித்துள்ளார். 

Tags:    

Similar News