கேரளாவில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் - பிரதமர் மோடி
- குஜராத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி ஒரு நகரத்தில் இருந்துதான் தொடங்கியது.
- கேரளாவில் பா.ஜ.க. அரசாங்கத்திற்கான அடித்தளத்தை திருவனந்தபுரம் அமைத்துள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள புத்திரிக்கண்டம் மைதான திடலில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-
இது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம். லட்சக்கணக்கான தொண்டர்களின் கடின உழைப்பு பலனளித்துள்ளது. எனது உரையைத் தொடங்குவதற்கு முன்பு, திருவனந்தபுரம் மக்களுக்கும், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் மரியாதையுடன் தலைவணங்க விரும்புகிறேன்.
இன்று இங்கு ஒரு புதிய ஆற்றலையும், ஒரு புதிய நம்பிக்கையையும் நான் காண்கிறேன். உங்கள் ஆற்றல் கேரளாவில் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு அளிக்கிறது.
1987-ம் ஆண்டுக்கு முன்பு, குஜராத்தில் பா.ஜ.க. ஒரு சிறிய கட்சியாக இருந்தது. 1987-ம் ஆண்டில் முதல் முறையாக பா.ஜ.க. அகமதாபாத் மாநகராட்சியில் வெற்றி பெற்றது.
குஜராத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி ஒரு நகரத்தில் இருந்துதான் தொடங்கியது. அதேபோல திருவனந்தபுரம் மாநகராட்சியில் பா.ஜ.க. பெற்ற வெற்றியால் குஜராத்தில் ஆட்சியை பிடித்ததைபோல கேரளாவிலும் நடக்கும். திருவனந்தபுரத்தில் பா.ஜ.க. பெற்ற வெற்றி சாதாரணமானதல்ல. இது வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் முன்னெப்போதும் இல்லாதது.
கேரளாவில் பா.ஜ.க. அரசாங்கத்திற்கான அடித்தளத்தை திருவனந்தபுரம் அமைத்துள்ளது. இந்த வெற்றி 'வளர்ச்சியடைந்த கேரளா'வை உருவாக்கு வதற்கானது. இது இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஊழல் ஆட்சியில் இருந்து கேரளாவை விடுவிப்பதற்கான உறுதிமொழியின் வெற்றியாகும்.
சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க திருட்டு வழக்கில் குற்றவாளிகள் மீது நிச்சயமாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்கள் தப்ப முடியாது. கேரளாவில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால், சபரிமலை தங்க இழப்பு குறித்து விசாரிக்கப்படும். குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இது எனது உத்தரவாதம்.
இவ்வாறு மோடி பேசினார்.