இந்தியா

SIR: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் - எதிர்க்கட்சிகள் முடிவு?

Published On 2026-03-10 01:53 IST   |   Update On 2026-03-10 01:53:00 IST
  • 63.66 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
  • 100 உறுப்பினர்களின் கையொப்பம் தேவை.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தீர்மானத்திற்கான அறிவிப்பு வரைவு இறுதி செய்யப்பட்டு இவ்வார இறுதியில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் சதாப்தி ராய் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவரும் யோசனையை முன்வைத்தார் என்றும் இதற்கு மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் உடன்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. 

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் மோசடியாக நீக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மார்ச் 6 முதல் கொல்கத்தாவில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

பிப்ரவரி 28 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மேற்கு வங்கத்தில் சுமார் 63.66 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதேபோல் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் எஸ்ஐஆர் நடவடிக்கைகளில் மோசடி நடந்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து அகற்ற இந்தியா கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதியை எந்த நடைமுறையில் பதவி நீக்கம் செய்ய முடியுமோ, அதே கடுமையான நடைமுறைதான் தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் பொருந்தும்.

இந்தத் தீர்மானத்தை மக்களவையில் கொண்டுவரக் குறைந்தது 100 உறுப்பினர்களின் கையொப்பமும், மாநிலங்களவையில் கொண்டுவர 50 உறுப்பினர்களின் கையொப்பமும் தேவை.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்தத் தீர்மானம் வெற்றி பெறும்.

இந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டால், அது தேர்தல் ஆணையத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் மிகப்பெரிய அரசியல் நடவடிக்கையாகப் பார்க்கப்படும். 

நேற்று தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் அமர்வு வரும் ஏப்ரல் 2 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News