திருவனந்தபுரம்-தாம்பரம் உள்பட 3 அம்ரித் பாரத் ரெயில்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
- எம்.ஜி. சாலை பாளையம், தியாகிகள் நினைவிட சந்திப்பில் இருந்து விழா நடைபெறும் கிழக்கு கோட்டை வரை ரோடு ஷோ நடத்துகிறார்.
- பிரதமர் மோடி புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெறும் ரெயில்வே விழாவில் பங்கேற்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் முதன் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி பா.ஜ.க. வரலாறு படைத்தது. அப்போது அந்த வெற்றியை பற்றி கருத்து தெரிவித்த போது, விரைவில் திருவனந்தபுரம் வர உள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.
அதன்படி பிரதமர் மோடி இன்று தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். பிறகு எம்.ஜி. சாலை பாளையம், தியாகிகள் நினைவிட சந்திப்பில் இருந்து விழா நடைபெறும் கிழக்கு கோட்டை வரை ரோடு ஷோ நடத்துகிறார்.
பிறகு புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெறும் ரெயில்வே விழாவில் பங்கேற்கிறார். அங்கிருந்து நாகர்கோவில்-மங்களூரு, திருவனந்தபுரம்-தாம்பரம், திருவனந்தபுரம்-ஐதராபாத் ஆகிய வழித்தடங்களில் 3 அம்ரித் பாரத் ரெயில்கள் மற்றும் குருவாயூர்-திருச்சூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவை ஆகியவற்றை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 2 மணிக்கு விமானம் மூலம் சென்னை மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.