புனேயில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: இளம்பெண்ணை கத்தியால் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 2 வாலிபர்கள்
- பெண் அணிந்திருந்த மூக்குத்தி, கம்மல், ஒரு பவுன் செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
- பெண் கூறிய அடையாளங்களை வைத்து குற்றவாளிகள் 2 பேரையும் சில மணி நேரங்களிலேயே பிடித்து கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே ஷிரூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனது ஆண் உறவினர் ஒருவருடன் வீட்டின் அருகே உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவர்கள் இருவரையும் செல்போனில் படம் பிடித்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் எங்களை ஏன் படம் பிடிக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது வாலிபர்கள் 2 பேரும் தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி அவர்கள் 2 பேரையும் நெருக்கமாக இருக்க சொல்லி கட்டாயப்படுத்தி மிரட்டினர். அவர்கள் நெருக்கமாக இருந்ததை படம் பிடித்து உறவினர்களுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டினார்கள்.
அந்த வாலிபரை அங்கிருந்து அடித்து விரட்டி விட்டு அந்த இளம்பெண்ணை 2 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த பெண் அணிந்திருந்த மூக்குத்தி, கம்மல், ஒரு பவுன் செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனால் செய்வதறியாமல் தவித்த இளம்பெண் 112 என்ற எண்ணிற்கு போன் செய்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து ரஞ்சன்கான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பெண் கூறிய அடையாளங்களை வைத்து குற்றவாளிகள் 2 பேரையும் சில மணி நேரங்களிலேயே பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த வாரம் புனே பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த இளம்பெண்ணை அரசு பஸ்சுக்குள் வைத்தே வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.