ராகுல் தவறாக எதுவும் சொல்லவில்லை- பிரியங்கா காந்தி
- வாக்குகள் திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி பெரிய தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
- 30 நாட்களுக்குள் பிரமாணப்பத்திரம் சமர்ப்பிக்கலாம்.
புதுடெல்லி:
பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நேற்று தேர்தல் கமிஷன் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடன் இணைந்து வாக்குகளை திருடியதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதிக்குட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்ற தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் சகோதரியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி எம்.பி. இன்று பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்குகள் திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி பெரிய தகவலை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தவறாக எதுவும் சொல்லவில்லை. ஏதேனும் பிரச்சனை அல்லது தற்செயலான தவறு இருந்தால், அது விசாரிக்கப்பட வேண்டும்.
ஆனால் விசாரிப்பதற்கு பதிலாக பா.ஜ.க. ஒரு பிரமாணப் பத்திரத்தைக் கேட்கிறது. 30 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கலாம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. பின்னர் அவர்கள் ஏன் பிரமாணப் பத்திரத்தைக் கேட்கிறார்கள்?
வேண்டுமென்றே தவறு நடந்தால் அதை நீங்கள் விசாரிக்க வேண்டும். நீங்கள் ஏன் எங்களுக்கு வாக்காளர் பட்டியலை வழங்கவில்லை? நீங்கள் ஏன் விசாரிக்கவில்லை? சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்களா? சுமார் 1 லட்சம் வாக்காளர்களை நீக்குவதன் மூலம், யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாக தீர்மானிக்க முடியும். ஒரு நாள் மற்றவர்கள் அதிகாரம் பெறும்போது ஜனநாயகத்தின் இந்த முழுமையான அழிவில் துணை நின்றவர்கள் அதற்குப் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.