இந்தியா

மக்களவையில் கடும் விவாதத்தை ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் விவகாரம்

Published On 2025-12-05 12:49 IST   |   Update On 2025-12-05 12:49:00 IST
  • தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நண்பகல் 12மணிவரை ஒத்திவைப்பட்டது.
  • திருப்பரங்குன்றத்தில் 2014-ல் அளித்த உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலேயே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது - டி.ஆர்.பாலு

பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கை முடங்கியுள்ளது.

இதனிடையே, இன்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி இருஅவைகளிலும், ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். அதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும் இவ்விவகாரம் அரசு சார்ந்த விவகாரம் கிடையாது எனக்கூறி விவாதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையடுத்து தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நண்பகல் 12மணிவரை ஒத்திவைப்பட்டது. இதன்பின் மக்களவை கூடியதும் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனிடையே பேசிய டி.ஆர்.பாலு, திருப்பரங்குன்றம் விவகாரம் மிகுந்த கவலை அளிக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர். தனிநீதிபதி அளித்த தீர்ப்பால் திருப்பரங்குன்றத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் 2014-ல் அளித்த உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலேயே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது என்றார்.

டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் என்ன தவறு என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, நீதிபதி சாமிநாதன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என டி.ஆர்.பாலு எம்.பி. பேசியதற்கு மத்திய அமைச்சர் கிரஷ் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்தார்.

இதனிடையே நீதிபதி சாமிநாதன் குறித்த டி.ஆர்.பாலுவின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மக்களவையில் தி.மு.க.- பா.ஜ.க. எம்.பி.க்கள் மாறிமாறி கோஷமிட்டனர். 

Tags:    

Similar News