புதிய உச்சபட்ச தலைவர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை- ஈரான் மூத்த மதத்தலைவர் டெல்லியில் தகவல்
- ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கடந்த 28-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார்.
- இதனை தொடர்ந்து காமேனியின் மகன் முஜ்தபா காமேனி புதிய உச்சபட்ச தலைவராக தேர்வானதாக கூறப்பட்டது.
புதுடெல்லி:
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அந்த நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கடந்த 28-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து புதிய உச்சபட்ச தலைவரை தேர்வு செய்வதற்காக 88 நபர் மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடத்தி வருகிறது.
இதில் காமேனியின் மகன் முஜ்தபா காமேனி புதிய உச்சபட்ச தலைவராக தேர்வானதாக கூறப்பட்டது. ஆனால் புதிய தலைவர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்றும் அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் ஈரான் உச்சபட்ச தலைவரின் இந்திய பிரதிநிதியும், மூத்த மதத்தலைவருமான அயதுல்லா அப்துல் மஜீத் ஹக்கீமேலகி டெல்லியில் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'முஜ்தபா காமேனி அடுத்த உச்சபட்ச தலைவர் என வெளியான தகவலில் உண்மை இல்லை. ஏனெனில் இதுவரை புதிய தலைவரை கவுன்சில் தேர்வு செய்யவோ, பரிந்துரைக்கவோ இல்லை. ஆனால் அந்த பணிகள் நடந்து வருகிறது' என்று கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, 'அந்த பதவிக்கு பலர் இருக்கின்றனர். அதில் ஒருவர்தான் முஜ்தபா. அது அயதுல்லா காமேனியின் மகன் என்பதற்காக அல்ல. மாறாக அவரது தகுதி காரணமாகவே அவரை பரிசீலிக்கிறார்கள். ஆனால் இதில் முடிவு எடுக்கவில்லை. இந்த உயர் பதவிக்கு தகுதியான வரை தேடி வருகின்றனர்' என்றும் தெரிவித்தார்.