இந்தியா

பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தால் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா?

Published On 2025-04-04 14:51 IST   |   Update On 2025-04-04 14:51:00 IST
  • கொழும்பில் இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
  • கடந்த 10 ஆண்டுகளாக இலங்கைக்கு பல 100 கோடி டாலர்கள் மதிப்பிலான கடனை சீனா வழங்கியுள்ளது.

புதுடெல்லி:

பிரதமர் மோடி இலங்கைக்கு இன்று முதல் 3 நாட்கள் செல்லும் அரசு முறைப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடி பிரதமரான பிறகு 2019-இல் இலங்கைக்கு சென்றார். அதன் பிறகு அந்நாட்டுக்கு அவர் மேற்கொள்ளும் 2-வது பயணம் இது. இடைப்பட்ட ஆண்டுகளில் இரு தரப்பும் புவிசார் அரசியல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியிலான பல மாற்றங்களைச் சந்தித்துள்ளன.

இந்தியாவும் இலங்கையும் நீண்ட பொருளாதார வரலாற்றைக் கொண்ட நாடுகள். இந்தியாவின் முதல் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இலங்கையுடன் 1998-ல் கையொப்பமாகி 2000-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும் வர்த்தக புள்ளி விவரங்களின்படி 2018-ல் 4.67 பில்லியன் டாலராக இருந்த இலங்கைக்கான இந்தியாவின் ஏற்றுமதி, 2023-ல் 3.62 பில்லியன் டாலராக சரிந்தது.

இதே காலகட்டத்தில் இலங்கையின் இந்தியாவுக்கான ஏற்றுமதி 2018-ல் 1.32 பில்லியன் டாலரிலிருந்து 2023-ல் 991 மில்லியன் டாலராக குறைந்தது.

இலங்கையில் நாளை (சனிக்கிழமை) அதிபர் அனுர குமார திசாநாயக பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் ஒப்பந்தங்கள் கையொப்பம், முக்கியத் தலைவர்களுடனான சந்திப்புகள் நடக்கின்றன.

நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) அனுராத புறத்துக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு புனித ஸ்ரீ மகா போதியில் வழிபடுகிறார்.

கொழும்பில் இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். குறிப்பாக, காணொலி வாயிலாக திருகோணமலையின் சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

வடகிழக்கு நகரமான திருகோண மலையில் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அதனால் இந்த இடத்தில் நிறைவேற்றப்படும் திட்டத்தை இந்தியா கேந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது.

இலங்கைப் பயணத்தின்போது அந்நாட்டு கடற்படையால் தொடர்ந்து சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சனையின் தீவிரம் குறித்தும் பிரதமர் மோடி இலங்கை அதிபர் மற்றும் அந்நாட்டுத் தலைவர்களுடன் பேசத் திட்டமிட்டுள்ளார். இந்த விஷயத்தில் ஏற்கெனவே தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன. பிரதமரின் இலங்கைப் பயணத்துக்குப் பிறகு மீனவர் பிரச்சனை தொடர்பான தீர்வை எட்டுவதற்கான இரு நாட்டு கூட்டுக்குழு கூட்டத்தை அடுத்த சில வாரங்களில் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே நடந்து வருகின்றன.

இலங்கை அதிபராக அனுரகுமார திசாநாயக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் டிசம்பரில் அவர் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்துக்கு இந்தியாவைத் தேர்வு செய்தார். ஆனால், இந்தியாவைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில் சீனாவுக்கு அவர் சென்றதை இந்தியா விரும்பவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக இலங்கைக்கு பல 100 கோடி டாலர்கள் மதிப்பிலான கடனை சீனா வழங்கியுள்ளது. முன்னதாக, 2017-ம் ஆண்டில் சீனாவிடம் வாங்கிய கடனை, திருப்பிச் செலுத்த முடியாததால், இலங்கை அதன் தெற்கு துறைமுகமான அம்பாந்தோட்டையை பெய்ஜிங்கை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு 1.12 பில்லியன் டாலருக்கு ஒப்படைத்தது.

அந்த துறைமுகத்தை மையமாக வைத்து இலங்கை செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பல்கள், ராணுவ கப்பல்கள் நாள்கணக்கில் முகாமிட்ட செயல்பாடு, தங்களை வேவு பார்க்கும் சீனாவின் முயற்சி என இந்தியா சந்தேகம் எழுப்பியது.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் சந்திப்பின்போது பரஸ்பர உறவைப் பேண இரு தலைவர்களும் உறுதியளித்துக் கொண்டதை முன்னெடுக்கும் விதமாக இலங்கைப் பயணத்தை பிரதமர் மோடி பயன்படுத்திக் கொள்வார் என்கின்றனர் வெளியுறவு ஆய்வாளர்கள்.

அதிலும் புவிசார் அரசியல் ரீதியாக அதிபர் திசாநாயக சீனாவுக்கு சென்று திரும்பிய 3 மாதங்களுக்குப் பிந்தைய பிரதமர் மோடியின் கொழும்பு பயணம். நட்புறவுக்கான உறுதிப்பாட்டை நிரூபிக்க இலங்கைக்கு வழங்கப்படும் வாய்ப்பு என நிபுணர்கள் கருதுகின்றனர்.

உள் கட்டமைப்பில் சீன முதலீடுகள் இலங்கைக்கு முக்கியமாக இருந்தாலும், உள்ளூர் தேவைகளுடன் ஒத்துப்போகும் உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவுடனான தனது கூட்டாண்மையை பன்முகப்படுத்த வேண்டிய தேவை இலங்கைக்கு உள்ளது.

பிராந்திய பாதுகாப்பு கண்ணோட்டத்தில், இரு நாடுகளும் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் காலநிலை மாற்ற தாக்கம் உள்ளிட்ட பொதுவான சவால்களை எதிர்கொள்வதால், பிரதமர் மோடியின் இலங்கைப் பயணம் கடலோர கண்காணிப்பு, பேரிடர் தயார்நிலை மற்றும் பரஸ்பர நீலப் பொருளாதார முயற்சிகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல சாத்தியமாக்கலாம்.

பொருளாதார ரீதியாகவும் புவிசார் அரசியல் ரீதியாகவும் ஒரு தவிர்க்க முடியாத கூட்டாளியாக இந்தியா இலங்கைக்குத் தேவை என்பது தொடர்ந்து உணர்த்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் சீனாவை ஒதுக்கிவிட்டு. இந்தியாவைத் தனது உண்மையான கூட்டாளியாக இலங்கை ஏற்பது இயலாது என்றாலும், முன்னுரிமையும், முக்கியத்துவமும் இந்தியாவுக்குத் தான் என்பதை உறுதிப்படுத்துவதாக பிரதமர் மோடியின் இலங்கை பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News