'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றியை காங்கிரஸ் தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை- பிரதமர் மோடி கடும் தாக்கு
- பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அறிந்தபோது நமது இதயங்கள் கவலைகளால் நொறுங்கின.
- சிவபெருமானின் ஆசியால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன.
வாரணாசி:
பிரதமர் மோடி இன்று ஒருநாள் பயணமாக உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசி தொகுதிக்கு சென்றார். அங்கு அவருக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மந்திரிகள், பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
விமான நிலையத்தில் இருந்து வாரணாசியில் சேவாபுரி, காலிகாதாம் என்ற இடத்தில் நடந்த விழாவுக்கு பிரதமர் மோடி காரில் சென்றபோது வழி நெடுகளிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு நின்று வரவேற்றனர்.
வாரணாசி விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 20-வது தவணையாக நாடு முழுவதும் 9 கோடியே 70 விவசாயிகளுக்கு வழங்கும் தொகையை விடுவித்தார். அந்த வகையில் இன்று விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரத்து 500 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இதையடுத்து காசியில் பொதுமக்களுக்கு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 52 புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.2,200 கோடி செலவில் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
இதை தவிர 2 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பிரதமர் மோடி உபகரணங்கள் வழங்கினார்.
விழாவில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அறிந்தபோது நமது இதயங்கள் கவலைகளால் நொறுங்கின. அந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று நாங்கள் உறுதி அளித்து இருந்தோம். அதன்படி கடவுள் அருளால் எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
சிவபெருமானின் ஆசியால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன. அந்த போரின் வெற்றியை நான் இன்று சிவபெருமானின் காலடியில் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். நாட்டில் அநீதியும், அக்கிரமமும் தலைவிரித்து ஆடும் போது சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடுவார். அது தான் தற்போது நடந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி நாடு முழுவதும் உள்ள 140 கோடி மக்களின் ஒற்றுமையையும், வலிமையையும் வெளிப்படுத்தியது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் நாம் பழிக்கு பழி வாங்கி இருக்கிறோம்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் பாகிஸ்தானை கதற வைத்தன. அந்த நாட்டில் இருந்த தீவிரவாத முகாம்கள் அனைத்தையும் நமது ஏவுகணைகளும், டிரோன்களும் துல்லியமாக தாக்கி அழித்தன. தீவிரவாத இயக்கத்தின் தலைமை அலுவலகம் நொறுக்கப்பட்டது.
அதுபோல பாகிஸ்தான் நாட்டின் விமானப்படை தளம் தகர்க்கப்பட்டது. இப்போதும் அந்த விமானப்படை தளம் தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் இன்னும் கதறிக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த நாடு கதறுவது போல காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளும் கூட கதறுகின்றன. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை வெற்றிகரமாக, துல்லியமாக இந்திய ராணுவம் தாக்கி அழித்ததை காங்கிரஸ்காரர்களால் இன்னமும் ஜீரணிக்க இயவில்லை.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் எதிரிகளுக்கு இந்தியா மிகவும் தெளிவான எச்சரிக்கையை தெரிவித்து இருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு உலகில் யார் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை இந்தியா விட்டு வைக்காது. எங்கிருந்தாலும் அவர்களுக்கு இந்தியா தண்டனை கொடுக்கும் என்பதை இந்த நேரத்தில் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் பாதாள உலகத்தில் சென்று மறைந்தாலும் அவர்களை இந்தியா தேடி பிடித்து அழிக்கும்.
அதே சமயத்தில் நாட்டை முன்னேற்றும் பணிகளிலும் மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்துகிறது. வேளாண் துறையை இன்னும் மேம்படுத்த உறுதி பூண்டு இருக்கிறோம். அதற்காக விவசாயிகளுக்கு இன்னும் பல நன்மைகள் வர இருக்கிறது.
விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதை நாங்கள் இலக்காக வைத்து இருக்கிறோம். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பவர்கள் உதவிகளையும், சலுகைகளையும் பெற முன்னுரிமை அளிக்கப்படும். இதுதான் எனது வளர்ச்சி திட்டத்தின் மந்திரம் ஆகும். ஆனால் இதையெல்லாம் தடுப்பதற்கு இங்குள்ள சமாஜ்வாடி கட்சி மறைமுகமாக செயல்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் செய்யப்படும் வளர்ச்சி பணிகளை அகிலேஷ் யாதவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே விவசாயிகளுக்காக கொண்டு வரப்படும் உதவி திட்டங்களை குறை கூறி வதந்தி பரப்புவதை சமாஜ்வாடி கட்சியினர் வழக்கத்தில் வைத்துள்ளனர்.
ஆனால் காசியில் உள்ள சிவபெருமானின் ஆசியால் அவையெல்லாம் தவிடு பொடியாகி இருக்கிறது. காசி நகரில் மட்டுமின்றி இந்த மாநிலத்தில் செய்யப்படும் மேம்பாட்டு பணிகள் கங்கை நதி போன்று தங்கு தடையின்றி பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது.
பாகிஸ்தானுக்கு நாம் கொடுத்து இருக்கும் பதிலடி அவர்களால் நிச்சயம் மறக்க முடியாது. பாகிஸ்தான் மீண்டும் இந்திய மண்ணில் அதே பாவத்தை செய்ய நினைத்தால் இந்த உத்தரபிரதேசத்தில் தயாராகும் ஏவுகணைகளை அவர்களை மீண்டும் தாக்கி அழிக்கும்.
ஆனால் இங்குள்ள சமாஜ்வாடி கட்சியினருக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளை ஏன் சுட்டுக்கொலை செய்தீர்கள் என்று பாராளுமன்றத்தில் இப்போது கேள்வி எழுப்புகிறார்கள். அகிலேஷ் யாதவ் கட்சியின் கேள்வி பொறுப்புள்ள கேள்வியா?
பொது அறிவு படைத்த யாராவது இதற்கு பதில் சொல்வார்களா? தீவிரவாதிகள் கண்டு பிடிக்கப்பட்டதும் அவர்கள் தப்பி செல்ல வாய்ப்பு கொடுக்க வேண்டுமா? அல்லது வேட்டையாடப்பட வேண்டுமா? இது எல்லோருக்கும் தெரிந்தது தானே?
சமாஜ்வாடி கட்சியினருக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன். இது புது பாரதம். எதிரிகளுக்கு நமது கடற்படையும், விமானப்படையும் பதில் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் எதிரிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை காங்கிரசும், அவர்களது நண்பர்களும் ஏற்க மறுத்ததை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
காங்கிரஸ்காரர்களும், சமாஜ்வாடி கட்சிக்காரர்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் போரில் இந்தியா சுயசார்புடன் செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஆயுதங்களை பயன்படுத்தி நாம் வெற்றி பெற்று இருக்கிறோம்.
ஆனால் இதை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நமது படைகளை அவமதித்துக் கொண்டே இருக்கிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை கூட சமாதான ஒரு செயல் என்று காங்கிரசார் கிண்டல் செய்ததை மக்கள் மறக்க மாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில்இருந்த போது அவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். தற்போது தீவிரவாதிகள் கொல்லப்பட்டதும் மிகவும் கவலைப்படுகிறார்கள். சிந்தூர் என்ற பெயர்கூட காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறது.
ஆனால் நாங்கள் இதையெல்லாம் பார்த்து கவலைப்பட போவது இல்லை. தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து அதிரடியாக நடந்துக் கொண்டுதான் இருக்கும்.
தற்போது உலக அளவில் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல நாடுகள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு உள்ளன. இதனால் இந்தியாவும் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் கவனமாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.