மேம்படுத்தப்பட்ட 103 ரெயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
- ரூ.1,100 கோடி செலவில் ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன.
- கர்னிமாதா கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
பிகானேர்:
இந்தியா முழுவதும் 103 ரெயில் நிலையங்கள் அமிர்த நிலையங்களாக அறிவிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வசதிகளுடன் ரூ.1,100 கோடி செலவில் இந்த ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இந்த ரெயில் நிலையங்களில் நுழைவு வாசல் மற்றும் வெளியேறும் வாசல் தனித்தனியாக உருவாக்கப்பட்டுள்ளன. வாகனம் நிறுத்தும் வசதி, மின் தூக்கி, பயணிகள் காத்திருக்கும் பகுதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், திருவண்ணாமலை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், போளூர், குளித்துறை ஆகிய 9 ரெயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் சீரமைப்பு மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த 103 ரெயில் நிலையங்களையும் பிரதமர் மோடி இன்று ராஜஸ்தானில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதற்காக இன்று காலை அவர் ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றார். அங்கு வடமேற்கு பகுதியில் உள்ள தார் பாலைவனம் மண்டலத்தில் இருக்கும் பிகானேர் மாவட்டத்திற்கு சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
முதலில் அவர் பாகிஸ்தான் எல்லைக்கு மிக மிக அருகில் உள்ள நல் விமானப்படை தளத்துக்கு சென்றார். இந்த விமானப்படை தளம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அங்கு அவர் விமானப்படை வீரர்களை சந்தித்து பேசினார்.
இதையடுத்து 10.30 மணிக்கு கர்னிமாதா கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதன்பிறகு பிகானேர்-மும்பை இடையிலான ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்டுள்ள 103 ரெயில் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார்.
இதையடுத்து பிகானேரில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.26 ஆயிரம் கோடி புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிறகு அந்த மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.