இந்தியா

பதஞ்சலியின் மன்னிப்பை 'பூதக்கண்ணாடி' கொண்டு தான் தேட வேண்டும் - உச்ச நீதிமன்றம் கண்டனம்

Published On 2024-04-23 10:36 GMT   |   Update On 2024-04-23 10:36 GMT
  • ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பதஞ்சலி நிறுவனம் 67 பத்திரிகைகளில் பகிரங்க மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார்.
  • பதஞ்சலி நிறுவனம் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரங்களின் அதே அளவில் தான் மன்னிப்பு கோரப்பட்டதா?

புதுடெல்லி:

பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் ஏப்ரல் 2-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதற்கிடையே, ஆச்சார்யா பால்கிருஷ்ணா சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை தனக்கு உண்டு. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படாது என நிறுவனம் உறுதி அளிக்கிறது என தெரிவித்திருந்தார்.

ஆனால், அவர்களது நிபந்தனையற்ற மன்னிப்பை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்தது.

அதன்பின் ஏப்ரல் 16-ம் தேதி, இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது எங்களுடைய கருத்துகள், செய்த தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்கவேண்டும் என பாபா ராம்தேவ், ஆசார்யா பாலகிருஷ்ணா வேண்டுகோள் விடுத்தனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மற்ற மருந்து முறைகளை இழிவுபடுத்த அதிகாரம் வழங்கியது யார்? நிரூபணமற்ற அலோபதி மருந்து விளம்பரங்களை எங்காவது பார்த்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2018 முதல் தவறான மருத்துவ விளம்பரங்களை வெளியிட்டு வரும் நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து பிராமண பாத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குழந்தைகள், முதியவர்களுக்கான உணவுகள் குறித்து தவறான விளம்பரங்கள் வெளியிட்ட நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட பொய் விளம்பரங்களில் எங்கே தவறு நடந்தது? - அனைத்து மாநில அரசுகளையும் வழக்கில் இணைக்கவும் மத்திய அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, பதஞ்சலி நிறுவனம் 61 பத்திரிகைகளில் பகிரங்க மன்னிப்பு கேட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பதஞ்சலி நிறுவனம் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரங்களின் அதே அளவில் தான் மன்னிப்பு கோரப்பட்டதா? மன்னிப்பு கோரும் விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

செய்தித் தாள்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் மன்னிப்புக் கேட்டு அதன் துண்டறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டு ஏப்ரல் 30-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

Tags:    

Similar News