இந்தியா

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - இந்தியாவில் தயார் நிலையில் முப்படைகள்

Published On 2025-05-08 07:47 IST   |   Update On 2025-05-08 07:47:00 IST
  • எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
  • ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் வான் பாதுகாப்பு அமைப்பு தயார் நிலையில் உள்ளன.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வான்வழி தாக்குதலாக மத்திய அரசு நேற்று முன்தினம் தொடங்கியது.

நள்ளிரவு 1 மணிக்குப்பின் இந்தியாவின் போர் விமானங்கள் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கி அழித்தன.

பாகிஸ்தானில் 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாதிகள் உள்ள அலுவலகங்கள், பயிற்சி முகாம்கள், அவர்களது வசிப்பிடங்கள் என 21 பயங்கரவாத நிலைகளை தரைமட்டமாக்கின.

அந்தவகையில் பாகிஸ்தானின் பகவல்பூர், முரிட்கே, சர்ஜால், சியால்கோட் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களும், முசாபராபாத், கோட்லி, பிம்பர், குல்பூர், பர்னாலா போன்ற இடங்களில் உள்ள கட்டமைப்புகள் இந்தியாவின் தாக்குதலுக்கு இரையாகின.

இதையடுத்து எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தினேஷ் குமார் என்ற ராணுவ வீரர் வீர மரணமடைந்தார். எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வரும் நிலையில் இந்தியாவில் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன. நிலம், நீர், ஆகாயம் என 3 வழிகளிலும் கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது.

ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் வான் பாதுகாப்பு அமைப்பு தயார் நிலையில் உள்ளன.

கடல் வழியான தாக்குதலை தடுக்க போர் கப்பல்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அரபிக்கடலில் பல்வேறு போர்கப்பல்கள் நிறுத்தி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

எந்தவிதமான தாக்குதல் வந்தாலும் எதிர்கொள்ள இந்திய முப்படைகள் தயார் நிலையில் உள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் எல்லை பாதுகாப்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

Tags:    

Similar News