இந்தியா

கேரள மாநகராட்சிகளில் இன்று தேர்தல்: திருவனந்தபுரம் மேயராக பா.ஜ.க.வின் ராஜேஷ் தேர்வு

Published On 2025-12-26 14:31 IST   |   Update On 2025-12-26 14:31:00 IST
  • காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் 2 சுயேட்டைகள் இணைந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்யலாம் என்ற நிலை நிலவியது.
  • அனைவரும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்தவர்கள் ஆவர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் கடந்த 13-ந்தேதி வெளியாகின. அதில் மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து யூனியன், கிராம பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

மாநகராட்சிகளில் கொச்சி, திருச்சூர், கொல்லம், கண்ணூர் ஆகிய 4 மாநகராட்சிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. மாநிலத்தின் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கூட்டணி கோழிக்கோட்டிலும், மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க.வும் கைப்பற்றியது.

45 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை இந்த முறை பாரதிய ஜனதா கைப்பற்றியது. இங்குள்ள 101 வார்டுகளில் 50-ல் பா.ஜ.க.வும், 29-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 19-ல் காங்கிரசும், 2 வார்டுகளில் சுயேட்சைகளும் வெற்றி பெற்றனர்.

இந்தநிலையில் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் மற்றும் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடந்தது. திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம், கண்ணூர், கொல்லம், திருச்சூர் ஆகிய 6 மாநகராட்சிகளிலும் காலை 10.30 மணிக்கு மேயர் பதவிக்கான தேர்தல் தொடங்கியது.

திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக வி.வி.ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் 2 சுயேட்டைகள் இணைந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்யலாம் என்ற நிலை நிலவியது. இந்த நிலையில் சுயேட்டை வேட்பாளர்களின் ஒருவர், பாரதிய ஜனதாவுக்கு தனது ஆதரவை வழங்கியதால் தனிப்பெரும்பான்மை பெற்று ராஜேஷ் மேயராக தேர்வானார்.

கொச்சி மாநகராட்சியின் மேயராக வி.கே. மினி மோல், கண்ணூர் மேயராக இந்திரா, திருச்சூர் மேயராக டாக்டர் நிஜி ஜஸ்டின், கொல்லம் மேயராக ஹபீஸ் ஆகியோர் தேர்வானார்கள். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்தவர்கள் ஆவர். புதிய மேயர்களாக தேர்வானவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

Tags:    

Similar News