இந்தியா

10 ஆண்டுகளில் இரு மடங்கு வளர்ச்சி: இந்திய எரிபொருள் துறையில் புதிய மைல்கல்

Published On 2025-12-26 10:41 IST   |   Update On 2025-12-26 10:41:00 IST
  • முதலிடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனாவும், மூன்றாவது இடத்தை இந்தியாவும் பிடித்துள்ளது.
  • முன்பு நகர்ப்புறங்களில் மட்டுமே அதிக அளவில் இருந்த எரிபொருள் நிலையங்கள், தற்போது கிராமப்புறங்களுக்கும் பரவியுள்ளன.

இந்தியாவின் வாகன எரிபொருள் விற்பனை நிலையங்களின் (Petrol Pumps) எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதி நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 1,00,266 எரிபொருள் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளதாக பெட்ரோலிய அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், உலகிலேயே அதிக பெட்ரோல் பங்குகளைக் கொண்ட நாடுகளில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனாவும், மூன்றாவது இடத்தை இந்தியாவும் பிடித்துள்ளது.

2015-ம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 50,451 பெட்ரோல் பங்குகள் மட்டுமே இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு மற்றும் கிராமப்புறங்களுக்கு எரிபொருள் எளிதாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

முன்பு நகர்ப்புறங்களில் மட்டுமே அதிக அளவில் இருந்த எரிபொருள் நிலையங்கள், தற்போது கிராமப்புறங்களுக்கும் பரவியுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த பங்குகளில் கிராமப்புறங்களின் பங்கு 22% ஆக இருந்தது. தற்போது அது 29% ஆக உயர்ந்துள்ளது.

இந்திய எரிபொருள் சந்தையில் அரசு நிறுவனங்களே பெரும்பான்மை ஆதிக்கம் செலுத்துகின்றன. 90% மேற்பட்ட பங்குகள் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமானவை.

தனியார் நிறுவனங்களான நாயாரா எனர்ஜி, ரிலையன்ஸ்-பிபி மற்றும் ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் மீதமுள்ள பங்குகளைக் கொண்டுள்ளன.

தற்போதைய பெட்ரோல் பங்குகள் வெறும் பெட்ரோல், டீசல் விற்பனையுடன் நில்லாமல், சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதிகளையும் கொண்ட 'எரிசக்தி மையங்களாக' மாறி வருகின்றன. தற்போது மூன்றில் ஒரு பங்கு நிலையங்களில் மாற்று எரிபொருள் வசதிகள் உள்ளன.

Tags:    

Similar News