கர்நாடகாவின் வெற்றியை திருடுகிறார் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்: சித்தராமையா குற்றச்சாட்டு
- பாக்ஸ்கான் 30 ஆயிரம் பெண்களை பணிக்கு அமர்த்தியதை ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
- மேக் இன் இந்தியா திட்டத்தை பாராட்டியதாக ராகுல் காந்திக்கு அமைச்சர் நன்றி தெரிவித்திருந்தார்.
கர்நாடக மாநிலத்தின் சாதனைகளுக்கு பெருமை தேடிக்கொள்வதன் மூலம் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கர்நாடகத்தின் வெற்றியை திருடுகிறார் என அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றியை அங்கீகரித்தற்காக மக்களவை எதர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு நன்றி எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சித்தராமையா பதில் அளித்துள்ளார்.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் பெண்களால் நிர்வகிக்கப்படும் தனது புதிய யுனிட்டில் 30,000 ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ளது. மேலும், இத்தகைய அளவில் மற்றும் வேகத்தில் உற்பத்தி வளரக்கூடிய ஒரு சூழலை உருவாக்கியதன் மூலம் முன்மாதிரியாகத் திகழ்ந்த கர்நாடகாவைப் பாராட்டி ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு அஷ்வினி வைஷ்ணவ் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் சித்தராமையா, "மேக் இன் இந்தியா உண்மையாக வெற்றி பெற்றிருந்தால், கர்நாடகா அரசு செய்த சாதனையை, பாஜக ஆளும் இரட்டை என்ஜின் மாநிலங்களால் ஏன் செய்ய முடியவில்லை. எங்களால் சாதனையை காட்ட முடியாதபோது, நீங்கள் மற்றவர்களின் வெற்றியை திருடி, பெருமையை எடுத்துக் கொள்கிறீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான பாக்ஸ்கான், சீனாவுக்கு வெளியே பெங்களூரு அருகே தேவனஹல்லியில் மிகப்பெரிய தொழிற்சாலையை நிறுவியுள்ளது. ஐ-போன் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனமாக பாக்ஸ்கான் திகழ்கிறது.