இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: மோடிக்கும் டிரம்புக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடக்கவில்லை.. ஜெய்சங்கர் விளக்கம்

Published On 2025-07-28 23:13 IST   |   Update On 2025-07-28 23:13:00 IST
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான டிஆர்எஃப் அமைப்பை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 193 நாடுகளில், மூன்று நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளன என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இடையே ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை தொலைபேசி உரையாடல் எதுவும் இல்லை என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த மக்களவை விவாதத்தின் போது மக்களவையில் பேசிய அவர், இந்த நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு வலுவான பதிலடி கொடுத்துள்ளோம் என்றார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் டிரம்பின் ஈடுபாட்டை நிராகரித்த அவர், பாகிஸ்தான் தான் தாக்குதலை நிறுத்த கோரியது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஜெய்சங்கர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான டிஆர்எஃப் அமைப்பை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், குவாட், பிரிக்ஸ் மற்றும் பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 193 நாடுகளில், மூன்று நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளன என்று தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தானும் சீனாவும் ஆறு தசாப்தங்களாக ஒத்துழைத்து வருகிறது. சீனாவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் விரிவுரைகளை வழங்குவது விசித்திரமானது.

ஒலிம்பிக்கில் பங்கேற்கவோ அல்லது ரகசிய ஒப்பந்தங்களைச் செய்யவோ நாங்கள் சீனா செல்லவில்லை. பயங்கரவாதம் குறித்த நமது அணுகுமுறையை விளக்கவும் வர்த்தக ஒப்பந்தங்களைப் பற்றி விவாதிக்கவும் தான் சீனா சென்றதாக ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். 

Tags:    

Similar News