இந்தியா

பெல்லாரியில் பரபரப்பு: துப்பாக்கிச்சூட்டில் காங்கிரஸ் பிரமுகர் பலி- பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

Published On 2026-01-02 23:01 IST   |   Update On 2026-01-02 23:01:00 IST
  • பா.ஜ.க. எம்.எல்.ஏ ஜனார்த்தன ரெட்டி வீடு முன் காங்கிரஸ் சார்பில் பேனர் வைக்கப்பட்டது.
  • இதைக் கண்ட ஜனார்த்தன ரெட்டி ஆதரவாளர்கள் அதை கிழித்து அகற்றினர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெல்லாரி டவுன் பகுதியில் வால்மீகி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா நாளை நடக்கிறது. இதையொட்டி பல்வேறு இடங்களில் காங்கிரஸ் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டது.

அதேபோல, முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. எம்.எல்.ஏவுமான ஜனார்த்தன ரெட்டியின் வீடு முன்பும் காங்கிரஸ் சார்பில் பேனர் வைக்கப்பட்டது. இதைக் கண்ட ஜனார்த்தன ரெட்டி ஆதரவாளர்கள் அதை கிழித்து அகற்றினர்.

இதுபற்றி தெரிய வந்ததும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாராபாத்ரெட்டி தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் அங்கு திரண்டு வந்து பா.ஜ.க.வினரிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது நாராபாத்ரெட்டியின் ஆதரவாளரான சதீஷ் ரெட்டி திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் காங்கிரஸ் பிரமுகரான ராஜசேகர், துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானார். அவரை யார் சுட்டுக்கொன்றது என தெரியவில்லை.

இதனால் அங்கு மோதல் வெடித்தது. இதில் ஜனார்த்தன ரெட்டி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை சிலர் உடைத்ததால் பதற்றம் அதிகமானது.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் அங்கு தடியடி நடத்தினர். கூட்டம் கலையாததால் போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி கூட்டத்தைக் கலைத்தனர். இதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக புரூஸ் பீட் போலீசார் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜனார்த்தன ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. சோமசேகர் ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு, மாநகராட்சி உறுப்பினர் மோத்கர் ஸ்ரீனிவாஸ், பிரகாஷ், ரமணா, பழன்னா, திவாகர், மாருதி பிரசாத், தம்மூர் சேகர், ஜனார்த்தன ரெட்டியின் நெருங்கிய நண்பர் அலிகான் ஆகிய 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பெல்லாரி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியதை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Tags:    

Similar News