இந்தியா

அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை... ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்த பா.ஜ.க.

Published On 2023-03-25 17:26 IST   |   Update On 2023-03-25 17:26:00 IST
  • ராகுல் மன்னிப்பு கேட்பாரா? என்று நீதிமன்றம் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார்.
  • தீர்ப்பு வழங்கப்பட்டதும் அவர்கள் ஏன் உயர் நீதிமன்றத்திற்கோ, உச்ச நீதிமன்றத்திற்கோ செல்லவில்லை?

புதுடெல்லி:

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறிய ராகுல் காந்தி, தன்னை சிறையில் அடைத்தாலும் அஞ்ச மாட்டேன் என பேட்டி அளித்தார். மேலும், பிரதமர் மோடி, தொழில் அதிபர் அதானி இடையேயான தொடர்புகள், அதானி குழுமம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டதாகவும், அவ்வாறு பேசியதன் எதிரொலியை உணருவதாகவும் கூறினார்.

ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-

2019ல் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால், மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது. பிரச்சினையை திசைதிருப்ப முயற்சிக்கிறார்.

தாழ்த்தப்பட்ட சமூக மக்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார். அப்படி பேசுவதற்கு அவருக்கு உரிமை இருந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தை அணுகவும் உரிமை இருக்கிறது. அவர் மன்னிப்பு கேட்பாரா? என்று நீதிமன்றம் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார்.

ராகுல் காந்தி வேண்டுமென்றே ஓபிசி பிரிவினரை அவமதித்துள்ளார். அதை பாஜக கண்டிக்கிறது. அவருக்கு எதிராக பாஜக தீவிர போராட்டம் நடத்தும்.

தீர்ப்பு வழங்கப்பட்டதும் அவர்கள் ஏன் உயர் நீதிமன்றத்திற்கோ, உச்ச நீதிமன்றத்திற்கோ செல்லவில்லை? தங்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவின் வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மணி நேரத்திற்குள் இடைக்கால தடை வாங்கினார்கள். ராகுல் காந்தியின் வழக்கில் வழக்கறிஞர்கள் ஏன் மவுனமாக இருந்தனர்? இது, ராகுல் காந்தி தன் பதவியை தியாகம் செய்ததுபோன்று காட்டி, அதன்மூலம் கர்நாடக தேர்தலில் பயனடைவதற்காக நன்கு திட்டமிடப்பட்ட யுக்தி ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News